ஈரானிய துறைமுகங்களுக்கான முற்றுகையைத் திங்கட்கிழமை (ஏப்ரல் 13) தொடங்கவுள்ளதாக அமெரிக்க இராணுவம் அறிவித்துள்ளது. இருப்பினும், பிற நாடுகளுக்குச் செல்லும் அல்லது அங்கிருந்து வரும் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைத் தாண்டிச் செல்வதை இது “தடுக்காது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
: ஈரானிய துறைமுகங்களுக்குள் நுழையும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் கப்பல் போக்குவரத்தை முடக்கும் நடவடிக்கை திங்கட்கிழமை கிழக்கு நேரப்படி (ET) காலை 10:00 மணிக்கும் (GMT 14:00), இலங்கை நேரப்படி மாலை 7:30 மணிக்கும் தொடங்கும் என அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (US Central Command) தெரிவித்துள்ளது.
ட்ரம்ப்பின் நிலைப்பாடு: ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் “திட்டமிட்டுத் தவறிவிட்டது” என்று டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்கக் கடற்படையைத் தாக்கும் ஈரானியர்கள் “நரகத்திற்கு அனுப்பப்படுவார்கள்” (Blow to hell) என்றும், ஈரானுக்குச் சுங்கக் கட்டணம் செலுத்தும் எந்தவொரு கப்பலும் தடுத்து நிறுத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
பாகிஸ்தானில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட இந்த பதற்றமான சூழலால், சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை $100-ஐத் தாண்டியுள்ளது.
“ஈரான் தனது அணு ஆயுதக் கனவுகளைக் கைவிடத் தயாராக இல்லை” என்பதால் தான் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற நேரடிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி (Abbas Araghchi), அமைதிப் பேச்சுவார்த்தையின் போது ஈரான் “நல்லெண்ணத்துடனேயே” (Good faith) செயற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைக்குத் தலைமை தாங்கிய ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் (Mohammad Bagher Ghalibaf), “அச்சுறுத்தல்களுக்கு ஈரான் ஒருபோதும் பணியாது” என்று கூறியுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையை நெருங்கும் எந்தவொரு இராணுவக் கப்பலும் தற்போதுள்ள போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயலாகவே கருதப்படும் என ஈரானின் புரட்சிகர இராணுவம் எச்சரித்துள்ளது.