இயந்திரக் கோளாறு காரணமாகக் கடலில் தத்தளித்து, இந்தியாவில் கரை ஒதுங்கிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு யாழ். மீனவர்களையும் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து வரவும், அவர்களின் மீன்பிடி உபகரணங்களை மீட்டுத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து மீனவர்களின் உறவினர்கள் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்றபோது, இயந்திரக் கோளாறு காரணமாகப் படகு செயலிழந்தது. இதனால் ஆறு நாட்களுக்கும் மேலாகக் குடும்பத்தாருடனான அவர்களது தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அவர்கள் நேற்று (05) இந்தியக் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளனர்.”
அவர்களின் குடும்பப் பொருளாதார நிலமையைக் கருத்தில் கொண்டு, அவர்களை விரைவாகத் தாயகம் அழைத்து வரவும், வாழ்வாதாரமாக விளங்கும் படகு மற்றும் வலைகளை அவர்களிடமே ஒப்படைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும், காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணிகளில் உதவி புரிந்த கடற்றொழில் அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் அனைவருக்கும் உறவினர்கள் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.