யாழ்ப்பாணத்தின் மிக முக்கியமான வரலாற்றுத் தொல்பொருள் சின்னங்களில் ஒன்றான நல்லூர் மந்திரி மனை மிக வேகமாக அழிவடைந்து வருவதாகவும், அதனைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை தேவை என்றும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே. சிவஞானம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த மழைக்காலத்தின் போது மந்திரி மனையின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. யாழ்ப்பாண தமிழ் மன்னர்களின் எஞ்சியிருக்கும் ஒரேயொரு வரலாற்றுச் சின்னம் இவ்வாறு கண் முன்னே அழிந்து போவதை அனுமதிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மந்திரி மனை தற்போது ஒரு தனிப்பட்ட ‘நம்பிக்கைப் பொறுப்பாளர்களின்’ (Trustees) சொத்தாக உள்ளது. இதனைப் புனரமைப்பதில் நம்பிக்கைப் பொறுப்பாளர்களுக்கும் தொல்லியல் திணைக்களத்திற்கும் இடையே நீண்டகாலமாக இழுபறி நிலை நிலவி வருகின்றது.
நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் மற்றும் தொல்லியல் திணைக்களம் இணைந்து அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ஒரு முடிவுக்கு வர வேண்டும்.
இதனைப் புனரமைக்கப் போதுமான நிதி இல்லை எனப் பொறுப்பாளர்கள் தெரிவித்தால், அதற்கான நிதி உதவிகளைத் தான் பெற்றுத் தரத் தயார் என அவர் உறுதியளித்துள்ளார்.
அல்லது தொல்லியல் திணைக்களம் இதனைப் பொறுப்பேற்றுச் செய்வதற்குப் பொறுப்பாளர்கள் அனுமதி வழங்க வேண்டும்.
இன்னும் இரண்டு வாரங்களுக்குள் இது குறித்த முறையான பதிலைத் தராவிட்டால், மந்திரி மனையை முழுமையாக அழிய விடுவது தான் அனைவரினதும் நோக்கமா என்ற கேள்வி எழும் என அவர் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
நல்லூர் மந்திரி மனைக்கு அருகிலேயே வசிப்பவர் என்ற ரீதியிலும், ஒரு தமிழ் பிரதிநிதி என்ற ரீதியிலும் இந்த வரலாற்றுச் சின்னத்தைப் பாதுகாப்பதில் தனக்கு மிகுந்த அக்கறை இருப்பதாக அவர் ஊடகவியலாளர் சந்திப்பில் சுட்டிக்காட்டினார்.