1953-ஆம் ஆண்டு கொரியப் போருக்குப் பின் தென் கொரியா, வட கொரியாவில் துப்பாக்கிச் சத்தம் ஓய்ந்திருக்கலாம். ஆனால், இன்னும் மோதல் முடியவில்லை.
கடந்த 75 ஆண்டுகளாகத் தணியாத அந்தப் பகை நெருப்பின் புதிய அத்தியாயமாகவே, அமெரிக்கா – தென் கொரியக் கூட்டுப் பயிற்சிக்கு முன் வட கொரியா ஏவுகணைச் சோதனை நடத்தியுள்ளது.
பொருளாதாரத் தடைகள், உலக நாடுகளின் தனிமைப்படுத்தல், ஐ.நா-வின் தடைகள், கடும் உணவுத் தட்டுப்பாடு… இவை எதுவுமே வட கொரியாவின் ஏவுகணைச் சோதனைகளை தடுத்து நிறுத்தவில்லை.
அமெரிக்கா போன்ற ஒரு வல்லரசை எதிர்த்து நிற்க வட கொரியாவுக்கும் அதன் அதிபர் கிம் ஜோங் உன்னுக்கும் எங்கிருந்து வருகிறது இந்தத் துணிச்சல்? ‘தற்காப்பு’ என்ற பெயரில் இரு தரப்பும் நடத்தும் மோதல், உலகை மீண்டும் பதற்றத்துக்குள் தள்ளியுள்ளது.
கொரிய தீபகற்பத்தின் அமைதி மீண்டும் தராசுத் தட்டில் தள்ளாடுகிறது. அமெரிக்காவும் தென் கொரியாவும் ‘உல்ச்சி ஃப்ரீடம் ஷீல்ட்’ (Ulchi Freedom Shield) என்ற பெயரில் மிகப் பெரிய கூட்டுப் போர்ப் பயிற்சியை ஆகஸ்ட் 17 முதல் 27 வரை நடத்தத் திட்டமிட்டன. தென் கொரியா சார்பில் 18,000 வீரர்களும், அமெரிக்கா சார்பில் 28,500 வீரர்களும் இப்பயிற்சியில் ஈடுபடுகிறார்கள்.
பயிற்சி தொடங்க சில நாட்களுக்கு முன்பு, அதாவது ஆகஸ்ட் 12-ம் தேதி காலை 6 மணிக்கு வட கொரியா தனது கிழக்குக் கடற்கரையை ஒட்டிய பகுதியில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவிச் சோதனை நடத்தி, வல்லரசு அமெரிக்காவையும் தென் கொரியாவையும் அதிரவைத்தது. 10 நாட்களுக்குள் வட கொரியா நடத்திய 2-வது ஏவுகணைச் சோதனை இது.
ஏவுகணைச் சோதனை குறித்து வட கொரியா இன்னும் விளக்கம் அளிக்கவில்லை. ஆனால், இது பற்றி சர்வதேச அரசியல் நோக்கர்கள் கூறுகையில், “அமெரிக்கா – தென் கொரியா இடையிலான கூட்டுப் பயிற்சிக்கு எதிரான எச்சரிக்கையாகவே வட கொரியாவின் ஏவுகணைச் சோதனையைக் கருத வேண்டும். தங்கள் மீது அமெரிக்கா தொடுக்கும் போருக்கான ஒத்திகையாகவே இதை வட கொரியா கருதுகிறது. ஆனால், அமெரிக்காவும் தென் கொரியாவும் இது பாதுகாப்பு ரீதியான ஒத்திகைதான் எனக் கூறுகின்றன” என்று தெரிவிக்கின்றனர்.
1950-களில் நடந்த கொரியப் போரில் தொடங்கிய பகை அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே 75 ஆண்டு காலமாக நீடித்து வருகிறது. தென் கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கி வட கொரியாவைத் துவம்சம் செய்தது. அந்த வடுவை வட கொரியா இன்னும் மறக்கவில்லை.
போர் முடிந்தாலும், தென் கொரியாவில் ஆயிரக்கணக்கான அமெரிக்க வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டதை வட கொரியா விரும்பவில்லை. ஈராக், லிபியாவில் தலையிட்டது போல் தங்கள் நாட்டிலும் அமெரிக்கா தலையிடும் எனக் கருதியே வட கொரியா அணு ஆயுதச் சோதனைகளை நடத்தியது. இதற்குப் பதிலடியாக, கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து அந்நாட்டை உலகளவில் தனிமைப்படுத்தியது அமெரிக்கா. இந்த பரஸ்பர நம்பிக்கையின்மையே இரு நாடுகளையும் எதிரும் புதிருமாக வைத்திருக்கிறது.
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக வட கொரியப் படைகள் பங்கேற்பதும் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்குப் பிடிக்கவில்லை. உக்ரைன் போரை ரஷ்யா தீவிரமாக நடத்துவதற்குக் காரணமே வட கொரியாதான் எனத் தென் கொரியாவும் அமெரிக்காவும் குற்றம்சாட்டி வருகின்றன.
1950-களின் கொரியப் போருக்குப் பின் ரஷ்யா – வட கொரியா இடையிலான ராணுவ உறவு தீவிரமடைந்துள்ளது. 2024 ஜூன் மாதம் அதிபர் புதின் மற்றும் அதிபர் கிம் இடையே நடந்த ஒப்பந்தம், உக்ரைன் போரின் போக்கையே மாற்றியது.
ரஷ்யாவுக்கு ஆயுதங்களை விற்பதன் மூலம் வட கொரியாவுக்குக் கோடிக்கணக்கான டாலர்கள் கிடைக்கின்றன. கைமாறாக 150-க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள், குறைந்த விலையில் கச்சா எண்ணெய், உணவுப் பொருட்களை ரஷ்யா வழங்குகிறது. விண்வெளி, செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தையும் பகிர்ந்தளிக்கிறது.
ரஷ்யா – வட கொரியா கூட்டணியால் அமெரிக்கா – தென் கொரியக் கூட்டுப் பயிற்சி தீவிரமடைந்துள்ளது. அணு ஆயுதங்களைக் கைவிடப்போவதில்லை என்பதில் வட கொரியா பிடிவாதமாக இருப்பதால், ஆசிய – பசிபிக் பிராந்தியம் எப்போதும் பதற்றமாகவே உள்ளது.