எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பருப்பு, நெத்தலி, தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளதாக புறக்கோட்டை மொத்த வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, சந்தையில் நுகர்வோர் அநீதிக்குள்ளாக்கப்படுவதைத் தடுப்பதற்காக நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புகள் மற்றும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
சில வர்த்தகர்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்களை மறைத்து வைப்பதன் மூலம் சந்தையில் செயற்கைத் தட்டுப்பாட்டை உருவாக்கவும், பொருட்களின் விலைகளை நியாயமற்ற முறையில் உயர்த்தவும் முற்பட்டுள்ளதாக அந்த அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் , நுகர்வோருக்கு இழைக்கப்படும் ஏதேனும் அநீதி அல்லது சந்தை முறைகேடுகள் குறித்து 1977 என்ற குறுகிய இலக்கத்தின் ஊடாக முறைப்பாடுகளைத் தெரிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.