இலங்கையில் அபாயகரமான இரசாயனங்கள் மற்றும் கழிவுகளைக் கட்டுப்படுத்தி, பொது சுகாதாரத்தையும் இயற்கைச் சூழலையும் பாதுகாக்கும் நோக்கில், சுமார் 204 மில்லியன் ரூபா பெறுமதியான அதிநவீன ஆய்வக உபகரணங்கள் திங்கட்கிழமை (13) முக்கிய தேசிய நிறுவனங்களிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.
சுற்றாடல் அமைச்சு மற்றும் இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் (UNDP) ஆகியன இணைந்து, உலகளாவிய சுற்றாடல் வசதியின் (GEF) நிதி அனுசரணையின் கீழ் இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளன.
மத்திய சுற்றாடல் அதிகாரசபை, சப்ரகமுவ பல்கலைக்கழகம், விவசாயத் திணைக்களம், இலங்கை சுங்கம், நுகர்வோர் விவகார அதிகாரசபை மற்றும் அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம் ஆகிய ஆறு பயனாளி நிறுவனங்களிடமே இவ்வுபகரணங்கள் கையளிக்கப்பட்டன. இதனுடன் இணைந்து, உபகரணங்களின் நீண்டகால தொழில்நுட்ப மற்றும் நிதி ரீதியான நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டன.
இங்கு வழங்கப்பட்ட அதிநவீன பகுப்பாய்வுக் கருவிகள், பாதரசம் மற்றும் நிலைபேறான சேதன மாசாக்கிகள் உள்ளிட்ட அபாயகரமான இரசாயனங்களைக் கண்டறிவதற்கும், பகுப்பாய்வு செய்வதற்கும் மற்றும் கண்காணிப்பதற்கும் இலங்கைக்கு உள்ள திறனை வலுப்படுத்தும். இது இரசாயனப் பொருட்களின் இறக்குமதி மற்றும் எல்லைக் கட்டுப்பாடு முதல் சந்தைக் கண்காணிப்பு மற்றும் அறிவியல் ஆராய்ச்சி வரையான அனைத்து மட்டங்களிலும் ஒழுங்குமுறை மேற்பார்வையை மேம்படுத்த உதவும்.
சுற்றாடல் அமைச்சு, UNDP மற்றும் உலகளாவிய சுற்றாடல் வசதியின் கூட்டுப் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படும் 5.04 மில்லியன் டொலர் மதிப்பிலான இந்தத் திட்டமானது, நாட்டின் இரசாயனங்கள் மற்றும் கழிவு முகாமைத்துவ கட்டமைப்பை வலுப்படுத்துவதுடன், உலகளாவிய சுற்றுச்சூழல் உடன்படிக்கைகளுக்கான இலங்கையின் கடப்பாடுகளை நிறைவேற்றவும் பெரிதும் துணைபுரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.