தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், நாட்டின் சுபீட்சத்தை முன்னெடுப்பதற்கும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய தேசியக் கட்சியை (UNP) ஐக்கிய மக்கள் சக்தியின் மேதினக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில், சமூக ஜனநாயகம் மற்றும் சமூக சந்தைப் பொருளாதாரத்தின் ஊடாக நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லும் அதேவேளையில், உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான முதன்மையான அடியை ஐக்கிய மக்கள் சக்திஎடுத்துவைக்க விரும்புவதாகப் பிரேமதாச தெரிவித்தார்.
தோல்வியடைந்த அரசியல் கலாச்சாரம் மற்றும் சூதாட்ட அரசியலில் இருந்து விலகி, கொள்கை அடிப்படையிலான நிர்வாகத்தின் மூலம் தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அதன் ஆதரவாளர்களுக்கு மாத்திரமன்றி, நாட்டின் அபிவிருத்தியில் அர்ப்பணிப்புடன் உள்ள அனைத்து முற்போக்குக் குடிமக்களுக்கும் பிரேமதாச இந்த அழைப்பை விடுத்துள்ளார். எதிர்வரும் மே மாதம் 1 ஆம் திகதி கொழும்பு பி.டி. சிறிசேன மைதானத்தில் (P.D. Sirisena Stadium) ஒன்றுகூடி, SJB-உடன் கைகோர்க்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.