Midtown உணவகம் ஒன்றில் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்து காரணமாக, அதே கட்டிடத்தில் உள்ள குடியிருப்புகளில் வசித்து வந்த மூன்று குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக டொராண்டோ தீயணைப்புப் படை CP24 ஊடகத்திற்குத் தெரிவித்துள்ளது.
எக்லிண்டன் அவென்யூ (Eglinton Avenue) மற்றும் பாத்தர்ஸ்ட் ஸ்ட்ரீட் (Bathurst Street) பகுதிக்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் அதிகாலை 3 மணிக்கு சற்று முன்னதாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கட்டிடத்தில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீயினால் தங்களது குடியிருப்புகள் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த மூன்று குடும்பங்களும் இடம்பெயர்ந்துள்ளன.
தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்தபோது, கட்டிடத்தின் பின்புறத்தில் இருந்து புகை வருவது தெரிந்ததுடன், உணவகத்திற்குள்ளும் கட்டிடத்தின் குடியிருப்புகளுக்குள்ளும் தீ பரவியிருந்ததைக் கண்டறிந்தனர்.
“அவர்கள் அடித்தளத்தில் (basement) பரவியிருந்த தீயை விரைவாகக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்,” என்று தற்காலிக மாவட்டத் தலைவர் ஜான் பாக்னோட்டா (John Pagnotta) புதன்கிழமை காலையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட 8 குடியிருப்பாளர்களும் தாங்களாகவே கட்டிடத்தை விட்டு வெளியேறியதால் எவருக்கும் காயங்கள் ஏற்பட்டதாகப் பதிவாகவில்லை.
இந்தத் தீ விபத்து சந்தேகத்திற்குரியதாகக் கருதப்படுவதுடன், தீ விபத்துக்கான காரணம், அது தொடங்கிய இடம் மற்றும் அது தொடர்பான சூழ்நிலைகள் குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது.
“நாங்கள் அடுத்த 12 மணித்தியாலங்களுக்குத் தீ கண்காணிப்புப் பணியை (fire watch) மேற்கொள்வதுடன், அதுவரை சம்பவ இடத்தையும் எங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்போம்,” என்று பாக்னோட்டா கூறினார்.