ல்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான 16 நாட்கள் செயற்பாட்டு பிரச்சாரத்தை முன்னிட்டு, தெற்காசிய ஊடகப் பெண்கள் அமைப்பின் இலங்கைக் கிளை (SAWM-SL), “நாம் தெரிவு செய்யும் சொற்கள்: நாம் எவ்வாறு சொல்கிறோம் என்பதே நாம் எவ்வாறு பார்க்கிறோம் என்பதைத் தீர்மானிக்கிறது” (The Words We Choose: Because How We Tell It Shapes What We See) எனும் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை இன்று (25) புதன்கிழமைஆரம்பித்துள்ளது.
இன்று திகதி முதல் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினம் வரை முன்னெடுக்கப்படவுள்ள இந்தப் பிரச்சாரம், “நீதியை உறுதிப்படுத்துவோம், பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்போம், தண்டனையிலிருந்து தப்பிக்கும் போக்கை முடிவுக்குக் கொண்டுவருவோம்” எனும் இந்த ஆண்டுக்கான சர்வதேசத் தொனிப்பொருளுடன் இணைந்து முன்னெடுக்கப்படுகிறது.
பால்நிலை அடிப்படையிலான வன்முறைகள் தொடர்பில் ஊடகங்களும் சமூகமும் பயன்படுத்தும் மொழிநடை, பொதுமக்களின் புரிதல், பொறுப்புக்கூறல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு ஆகியவற்றில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதை ஆராய்வதே இதன் நோக்கமாகும்.
இந்தப் பிரச்சாரத்துக்கான அடித்தளம், கடந்த 18 ஆம் திகதி கொழும்பு 03 இல் உள்ள மெண்டரினா ஹோட்டலில் நடைபெற்ற விசேட ஆலோசனைப் பயிற்சிப் பட்டறை மற்றும் இணை உருவாக்கக் கூடம் ஊடாக உருவாக்கப்பட்டது.
இதில் ஊடகவியலாளர்கள், வடிவமைப்பாளர்கள், உள்ளடக்க உருவாக்குநர்கள் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் ஒன்றிணைந்தனர்.
பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பின் கலாநிதி செபாலி கோட்டேகொட நெறிப்படுத்திய ஆரம்பக் கலந்துரையாடலில், பெண்களின் ஆடைச் சுதந்திரம், பால்நிலை அடிப்படையிலான வன்முறைகள் தொடர்பான பொதுமக்களின் மனப்பாங்கு, தொழில்நுட்பம் சார்ந்த பால்நிலை அடிப்படையிலான வன்முறைகள் (TFGBV), குயர் (Queer) மக்களின் உரிமைகள், விளிம்புநிலைச் சமூகத்தினர் மற்றும் ஊடகங்களின் பால்நிலை சார்ந்த பார்வை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டன.
அத்துடன், பொதுமக்கள் மற்றும் ஊடகங்களின் விமர்சனங்கள் எவ்வாறு பால்நிலையை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தி, வன்முறைகளை நியாயப்படுத்துகின்றன என்பதுடன், சட்ட மற்றும் தார்மீக இடைவெளிகளை எவ்வாறு மறைக்கின்றன என்பது குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பின் ஷ்ரீன் சரூர், சகோதரத்துவ முன்முயற்சியின் நபீலா இக்பால், Deletenothing.org அமைப்பின் மிஷாரி வீரபங்க்ச, பெண்கள் ஒற்றுமை வலையமைப்பின் டிமித்தி விஜேசிங்க, வெரிட்டே ரிசர்ச் நிறுவனத்தின் தீபாஞ்சலி அபேவர்தன மற்றும் கிராஸ்ரூட்டட் அறக்கட்டளையின் பபா தேசப்பிரிய ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, கலாநிதி சஞ்சன ஹத்தொட்டுவ தலைமையில் டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பக் கருவிகள் தொடர்பான விசேட அமர்வும் நடைபெற்றது.
இதன்போது, குழுக்களாக இணைந்து செயற்பட்ட பங்கேற்பாளர்கள் நான்கு முக்கிய இலக்குகளை மையப்படுத்தி, குறும்படங்கள், சுவரொட்டிகள், வழிகாட்டிகள், சித்திரக் கதைகள் (Comic Strips), விளக்கப்படக் கவிதைகள், விளக்கக் குறிப்புகள் மற்றும் பாதிக்கப்பட்ட ஒருவரின் உண்மைக் கதை உள்ளிட்ட 20 மும்மொழிப் படைப்புகளை உருவாக்கியுள்ளனர்.
மேற்குறிப்பிட்ட நான்கு பிரதான இலக்குகள் வருமாறு,
பாதிக்கப்பட்டவர்களின் சுயாதீனத்தை ஆதரித்தல், சிறுவர்களைப் பாதுகாத்தல் மற்றும் சட்ட, நிறுவன ரீதியான குறைபாடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவருதல்.
ஊடகங்கள் மற்றும் இணையவெளியில் காணப்படும் பரபரப்பூட்டும் செய்தியிடல், ஒரே மாதிரியான வார்ப்புருக்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களையே குற்றம்சாட்டும் போக்கிற்குச் சவால் விடுத்தல்.
ஆடைகளை அடிப்படையாகக் கொண்டு தீர்ப்புகளை வழங்கும் போக்கை நிராகரித்தல் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மீதான தேவையற்ற விசாரணைப் பார்வையை மாற்றியமைத்தல்.
இணையவழிப் பெண்கள் மீதான வெறுப்புணர்வு, டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த அபாயங்களுக்குத் தீர்வு காணுதல்.
புதன்கிழமை முதல் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் தயாரிக்கப்பட்ட புதிய விழிப்புணர்வு உள்ளடக்கங்கள் நாளாந்தம் வெளியிடப்படவுள்ளன.
தெற்காசிய ஊடகப் பெண்கள் அமைப்பின் இலங்கைக் கிளையின் உத்தியோகபூர்வ சமூக ஊடகத் தளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், லின்டின், எக்ஸ் (ட்விட்டர்), இணையத்தளம் மற்றும் அதன் பங்குதாரத் தளங்களான Bakamoono.lk, Rata.lk, @fearlesscollective ஆகியவற்றிலும், பிரதான ஊடகங்களின் இணையத்தளங்களிலும் இவை பகிரப்படவுள்ளன.
இந்த 16 நாட்கள் செயற்பாட்டு இயக்கக் காலப்பகுதியில் ஊடகவியலாளர்கள், உள்ளடக்க உருவாக்குநர்கள் மற்றும் பொதுமக்கள் இந்தத் தகவல் வளங்களைப் பகிர்ந்துகொள்வதுடன், நடைமுறையிலும் பயன்படுத்துமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கனடாவின் உலகளாவிய விவகாரங்களுக்கான திணைக்களத்தின் நிதியுதவியுடன், ஆசிய மன்றத்தின் ‘புதுப்பிக்கப்பட்ட பெண்களின் குரல் மற்றும் தலைமைத்துவம்’ திட்டத்தின் கீழ் தெற்காசிய ஊடகப் பெண்கள் அமைப்பின் இலங்கைக் கிளை அமைப்பினால் இந்தப் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது.