நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று (24) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வீதி விபத்துகளில் இரண்டு மோட்டார் சைக்கிள் செலுத்துநர்கள் மற்றும் 82 வயது வயோதிபப் பெண் உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கல்முனை -அக்கரைப்பற்று பிரதான வீதியில் வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த லொறியின் கதவை சாரதி திறந்த போது, பின்னால் வந்த சைக்கிள் அந்தக் கதவில் மோதி கவிழ்ந்துள்ளது. வீதியில் வீழ்ந்தவர்கள் மீது பின்னால் வந்த பஸ் மோதியதில், சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த கல்முனையைச் சேர்ந்த 23 வயது இளைஞர் கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
லொறி ஒன்று வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதிய விபத்தில் ரன்தம்பே பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய லொறி உதவியாளர் உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த சாரதி எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு முச்சக்கர வண்டிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பிந்தெனிய பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய முச்சக்கர வண்டிச் சாரதி உயிரிழந்துள்ளார். மற்றைய சாரதி மற்றும் இரண்டு பெண் பயணிகள் படுகாயமடைந்து முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து, எதிரே வந்த கெப் ரக வாகனத்துடன் மோதியதில் பலாங்கொடையைச் சேர்ந்த 19 வயதுடைய மோட்டார் சைக்கிள் செலுத்துநர் உயிரிழந்துள்ளார். பின்னால் அமர்ந்திருந்தவர் படுகாயமடைந்து தனமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் கவிழ்ந்த போது பின்னால் வந்த லொறி மோதியதில் துல்ஹிரிய பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபர் வரக்காபொல வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்துள்ளார்.
வீதியைக் கடக்க முற்பட்ட கட்டுபெத்த பகுதியைச் சேர்ந்த 82 வயது வயோதிபப் பெண் மீது மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில், படுகாயமடைந்து பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் செலுத்துநரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்குறிப்பிட்ட விபத்துகள் தொடர்பில் அந்தந்தப் பிரதேச பொலிஸ் நிலையங்கள் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றன.