கொழும்பில் உள்ள தங்க நகைக் கடைகளில் சுமார் 20 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளைத் திருடியதாகக் கூறப்படும் 37 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 2,800 மில்லிகிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டுள்ளது. நேற்று 23ஆம் திகதி காலி முகத்திடல் பகுதியில், கோட்டை பொலிஸ் அதிகாரிகளால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் விசாரணைகளின்படி, சந்தேகநபர் கோட்டை, துறைமுகம் மற்றும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவுகளிலுள்ள நகைக் கடைகளை இலக்கு வைத்துத் திருட்டில் ஈடுபட்டுள்ளார்.
இவர் பிரித்தானியப் பிரஜை போன்று தன்னை அடையாளப்படுத்தி, தங்க நகைகளைக் கொள்வனவு செய்ய வந்த வெளிநாட்டவர் எனக் கூறி கடை ஊழியர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளார். பின்னர் நகைகளைப் பார்வையிடுவது போன்று நடித்து அவற்றைத் திருடிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆறு மொழிகளில் சரளமாகப் பேசக்கூடிய இவர், தனது வெளிநாட்டுத் தோற்றம் மற்றும் பேச்சாற்றலைப் பயன்படுத்தி கடை ஊழியர்களை ஏமாற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் பல சந்தர்ப்பங்களில் இந்தத் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
68 சிறிய வைரங்கள் பதிக்கப்பட்ட அரைச் சவரன் எடையுடைய ரோஸ் கோல்ட் மோதிரம். – இளஞ்சிவப்பு நிற சபையர் கற்கள் பதிக்கப்பட்ட தங்க மோதிரம். – மேலும் பல தங்க நகைகள் உள்ளடங்குகின்றன.
திருடப்பட்ட நகைகளை சந்தேகநபர் புறக்கோட்டை செட்டியார் வீதியிலுள்ள தங்க நகைக் கடைகளில் விற்பனை செய்துள்ளதாகவும், விசாரணைகளின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அவை மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.