கடந்த ஒக்டோபர் 26-ஆம் திகதி நடைபெற்ற 2026 Toronto மாநகராட்சித் தேர்தலில் Toronto மாவட்டக் கல்விச் சபையின் (Toronto District School Board – TDSB) 11-ஆம் வட்டாரத்தில் போட்டியிட்டு 11,770 வாக்குகளைப் (27.35%) பெற்று அமோக வெற்றியீட்டிய ஈழத்தமிழ் வம்சாவளிப் பெண்ணான ரவிச்சா ரவீந்திரன் (Ravicha Ravinthiran), புதன்கிழமை (நவம்பர் 18) கல்விச் சபை உறுப்பினராக உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றுக்கொண்டார்.
Scarborough Centre மற்றும் Scarborough North ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய கல்விச் சபை வட்டாரம் 11 சார்பாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள அவர், அப்பகுதி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கல்விசார் பிரதிநிதியாகப் பணியாற்றவுள்ளார்.
Toronto விலுள்ள மாவட்டக் கல்விச் சபையின் தலைமை அலுவலகத்தில் (5050 Yonge Street) நடைபெற்ற உத்தியோகபூர்வ நிகழ்வில் தனது நான்கு ஆண்டுகாலப் புதிய பதவிக்கான சத்தியப்பிரமாணத்தை மேற்கொண்டு அவர் பொறுப்பேற்றுக்கொண்டார்.
Scarboroughவிலுள்ள அரச பாடசாலைகளில் கல்வி கற்று வளர்ந்த ரவிச்சா, புகழ்பெற்ற University of Waterloo அறிவியல் மற்றும் வணிகத்துறையில் சிறப்புத் தேர்ச்சியுடன் பட்டம் பெற்றவர். நிதி மற்றும் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், நீண்டகாலமாக Scarborough இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் கல்வி, தலைமைத்துவ மேம்பாட்டிற்காகத் தன்னார்வப் பணிகளை ஆற்றி வந்துள்ளார்.
இவரது சமூகப் பணிகளைப் பாராட்டி, கனேடியத் தமிழ் குடிமைச் செயற்பாட்டு மையத்தின் ’30 வயதுக்குட்பட்ட 30 சாதனையாளர்கள்’ (30 Under 30) விருது, ‘ வளர்ந்து வரும் நட்சத்திரம்’ (Scarborough Rising Star) விருது மற்றும் Ontario அரசின் உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் 4 ஆண்டுகளுக்கான இவரது இலக்குகள்:
* பாடசாலைகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் பகடிவதையைத் தடுத்தல்.
* பாடசாலைப் படிப்புக்குப் பிந்தைய வாழ்க்கைக்குத் தேவையான நிதி அறிவு மற்றும் தொழில் வழிகாட்டல் திறன்களை வளர்த்தல்.
* கல்விச் சபையின் நிதி ஒதுக்கீடுகளில் வெளிப்படைத்தன்மையைப் பேணி, வகுப்பறைகளுக்குரிய வளங்கள் சரியாகச் சென்றடைவதை உறுதி செய்தல்.