சென்னை:
குழப்பத்தில் உருவாகி, குழப்பத்திலேயே நாட்களைக் கடத்தும் தவெக ஆட்சியால் பாதிக்கப்படுவது மக்கள்தான் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் விரிவான பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
வெங்காயம் அழுகி வீணடிப்பு:
அவரது பதிவில், “வெளிச்சந்தையில் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், வட மாநிலங்களில் இருந்து வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு நியாயவிலைக் கடைகள் மூலம் குறைந்த விலைக்கு விற்கப்படும் என்று வார்த்தை ஜாலம் காட்டியது தவெக அரசு. இந்நிலையில் கடந்த வாரம் சுமார் 250 டன் வெங்காயம் வட மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு, சரக்கு ரயில் மூலமாகச் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, கொருக்குப்பேட்டையில் உள்ள கிடங்கில் மற்ற மாவட்டங்களுக்கு அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த மூன்று நாட்களாக இந்த வெங்காயம் லாரிகளில் இருந்து கீழே இறக்கப்படாததால் அத்தனையும் முழுமையாக அழுகி வீணாகி வருவதாகச் செய்திகள் தெரிய வருகிறது. 250 டன் அழுகிய வெங்காயத்துடன் கடந்த மூன்று நாட்களாகப் பத்து லாரிகளும் அங்கேயே அனாதையாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் மக்களின் வரிப்பணம் அநியாயமாக வீணடிக்கப்படுகிறது,” என்று அவர் வேதனையுடன் சாடியுள்ளார்.
காணாமல் போன 450 டன்:
தொடர்ந்து அவர், “இதுமட்டுமன்றி, NAFED மூலம் நான்காம் கட்டமாகக் கொள்முதல் செய்து வரவழைக்கப்பட்ட 450 டன் வெங்காயம் தரமில்லாமல் இருந்ததால் பெற்றுக்கொள்ளவில்லை என்று தமிழக அரசும், தங்களுக்குத் திருப்பி அனுப்பப்படவில்லை என்று NAFED தரப்பிலும் கூறப்பட்டுள்ளதாகச் செய்திகள் வருகின்றன. அதாவது, தமிழகத்திற்கு வந்த 450 டன் வெங்காயத்தை தற்போது காணவில்லை! குழப்பத்தில் உருவாகி, குழப்பத்திலேயே நாட்களைக் கடத்தும் இந்தத் திக்குத் தெரியாத தவெக ஆட்சியால் பாதிக்கப்படுவது தமிழக மக்கள்தான்,” என்று அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
சினிமாவா?:
முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகளைக் கிண்டலடித்த அவர், “இது என்ன சினிமாவா, டேக் சரியில்லை என்றால் கட் சொல்லிவிட்டு அடுத்த டேக்கில் பார்த்துக்கொள்ளலாம் என்று எளிதாகக் கடந்து போவதற்கு? இது ஆட்சி, மக்கள் நலன் மற்றும் மக்கள் வரிப்பணம் சம்பந்தப்பட்டது! அத்தியாவசியப் பொருளை எப்படிக் கையாள்வது என்பது கூடத் தெரியாமல், விலைவாசி உயர்வின் தீவிரம் புரியாமல், மந்தமாகச் செயல்படும் ஆச்சரியக்குறி அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். விலைவாசி கட்டுப்பாட்டிற்கான வழிமுறைகளை முழு கவனத்துடன் உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என இந்த அரசை ஆணித்தரமாக வலியுறுத்துகிறேன்,” என்று எடப்பாடி பழனிசாமி தனது பதிவில் ஆவேசமாகக் குறிப்பிட்டுள்ளார்.
#EPS #TVK #OnionPrice #NAFED #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive