இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் முன்னாள் தலைவர் / பணிப்பாளர் நாயகம் லலித் பியூம் பெரேரா பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை, சாமபுர பகுதியில் அமைந்துள்ள காணி மற்றும் அங்குள்ள கட்டிடங்கள் அரசுக்குச் சொந்தமானவை எனக்கூறி, இடைக்காலக் குத்தகை ஒப்பந்தங்களைத் தயாரித்து, அதைத் தேசிய இளைஞர் சேவை மன்றத்திற்கு குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொடுத்துள்ளதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதற்காக மூன்றாம் தரப்பினருக்கு முறையற்ற மற்றும் சட்டவிரோதமான முறையில் இளைஞர் சேவை மன்றத்தின் நிதியிலிருந்து 38 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும், பணிப்பாளர் சபையின் முறையான அனுமதியின்றி அக்கட்டிடத்தைச் புனரமைப்பு செய்வதற்காக இளைஞர் சேவை மன்றத்தின் நிதியிலிருந்து 13 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு முறையற்ற வகையில் பணம் செலுத்துவதற்கு வழிவகுத்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 51 லட்சம் ரூபாய் இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் நேற்று(28) கைது செய்யப்பட்டிருந்தார்.
பணி இடைநீக்கம் செய்யப்பட்ட குற்றத்தடுப்புப் பொறுப்பதிகாரி கைது!
பொலிஸ் காவலில் இருந்த போது இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள ஹோமாகம பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி, மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர், ஹோமாகம பொலிஸ் நிலையக் காவலில் வைக்கப்பட்டிருந்த போது உயிரிழந்த சம்பவத்திற்காக அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக அவருக்கு மேலதிகமாக, அப்பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் சேவையும் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் கிரிவத்துடுவை பிரதேசத்தைச் சேர்ந்த இஷார ஹர்ஷ குமார எனும் 29 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.
பொலிஸாரின் கடுமையான தாக்குதல் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.