நல்லூர் நினைவாலயத்தில் இருந்து காவற்துறையினரால் எடுத்துச் செல்லப்பட்ட தியாகதீபம் தி*லீபனின் திருவுருவச் சிலையை நீதிமன்றம் பொறுப்பேற்க மறுத்ததைத் தொடர்ந்து, அச்சிலையை காவற்துறையினர் மீண்டும் காவல் நிலையத்திற்கே எடுத்துச் சென்றுள்ளனர்.
நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் இந்த விவகாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, காவற்துறையினர் சிலையை மன்றில் ஒப்படைக்க முற்பட்டனர்.
எனினும், சிலையை அங்கு நிறுவியவர்கள் யார், அதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் போன்ற எந்தவித அடிப்படைத் தகவல்களும் இன்றி, சிலையை மட்டும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க முடியாது எனக் குறிப்பிட்ட நீதவான், அதனை ஏற்க மறுத்தார்.
இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பாகச் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகத் தெரிவித்த காவற்துறையினர், சிலையை மீண்டும் யாழ்ப்பாணம் தலைமை காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.
சிலை அகற்றமும் தொடர் எதிர்ப்பும்: தியாகதீபம் தி*லீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் நிறைவடைந்த மறுநாள் (செப்டெம்பர் 27), யாழ்ப்பாணத் தலைமையகக் காவற்துறைப் பொறுப்பதிகாரி தலைமையிலான சுமார் 20 பேர் கொண்ட காவற்துறைக் குழுவினர் நினைவாலயத்திற்குச் சென்று அங்கிருந்த சிலையை எடுத்துச் சென்றனர்.
சிலையை உடனடியாக அதே இடத்தில் மீண்டும் நிறுவ வேண்டும் என வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை யாழ்ப்பாணத்தில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணை: சிலை வைக்கப்பட்டமை மற்றும் நினைவாலயத்தில் பாடல்கள் ஒலிக்கவிடப்பட்டமை தொடர்பில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். முன்னதாக, நினைவேந்தல் காலப்பகுதியில் (செப்டெம்பர் 18) அனுமதியின்றிப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி ஒலிபெருக்கி சாதனங்களையும் காவற்துறையினர் பறிமுதல் செய்திருந்தனர்.