கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் கல்வி பயிலும், பிரஷாந்தினி நர்த்தனாலயத்தின் பரதநாட்டிய மாணவி செல்வி பி.எல். றெஜிஸ் றெஜிஸ்ரிகாவின் சோழன் உலக சாதனை பரதநாட்டிய நிகழ்வு கிளிநொச்சி, கே.கே மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
றெஜிஸ் றெஜிஸ்ரிகா தனது 9 ஆவது வயதில் தொடர்ச்சியாக ஐந்து மணித்தியாலங்களுக்கும் மேலாக பரதநாட்டியம் ஆடி, சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். இது இவரது 3 ஆவது உலக சாதனையாக அமைந்துள்ளது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்து கொண்டார்.
இதன்போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்,
“ஒரு சிறுமியின் அசைக்க முடியாத கனவு, அதை மெய்ப்பிக்க அவள் மேற்கொண்ட இடைவிடாத பயிற்சி, அவளுக்குப் பின்னால் உறுதுணையாக நின்ற பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் அளப்பரிய அர்ப்பணிப்பு. இவை அனைத்தும் ஒன்றிணைந்த போதுதான் இந்த அற்புதமான சாதனைப் பயணம் சாத்தியமாகியிருக்கிறது. வயது சிறியதாக இருக்கலாம். ஆனால் கனவுகளுக்கும் திறமைக்கும் எல்லையே இல்லை என்பதைத் தனது அசாத்திய முயற்சியால் நிரூபித்துக் காட்டியிருக்கிறார் நமது இளம் சாதனையாளர் றெஜிஸ்ரிகா.
இன்றைய இளம் தலைமுறையினருக்குத் தன்னம்பிக்கையையும், தோல்விகளைக் கண்டு அஞ்சாத விடாமுயற்சியையும் கற்றுத்தரும் ஒரு கலங்கரை விளக்கமாக றெஜிஸ்ரிகாவின் இந்த வெற்றிப் பயணம் அமைந்திருக்கிறது.
முறையான வழிகாட்டலும், உழைப்பும் இருந்தால் எந்தவொரு குழந்தையாலும் சாதனைகளின் உச்சத்தைத் தொட முடியும் என்பதற்கு இவரே சான்று. றெஜிஸ்ரிகாவை உலக சாதனையாளராக உருவாக்கிய அவரது பெற்றோர்களுக்கும், அவரது நடன ஆசிரியர் செல்வி அருணாசலம் கேதுசா அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.