திருப்பூர்:
சொந்த காரணங்களுக்காகவோ அல்லது கட்சி மாறுவதற்காகவோ பதவியை ராஜினாமா செய்துவிட்டு மக்கள் மீது இடைத்தேர்தலைத் திணிப்பவர்களே தேர்தலுக்கான முழு செலவையும் ஏற்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாகப் பேசியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி) மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) ஆகிய 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அக்டோபர் 6-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9-ஆம் தேதியும் நடைபெற உள்ளன. முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் பிரச்சாரக் களத்தில் இறங்க உள்ள நிலையில், தாராபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவை ஆதரித்து சீமான் நேற்று இரவு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பொதுமக்களிடையே சீமான் பேசியதாவது:
விசிலை விடு விவசாயியைத் தொடு:
“நாங்கள் எந்தத் தேர்தலிலும் இதுவரை வெற்றி பெறவில்லை; ஆனால், ஒருபோதும் மக்களை விட்டுச் செல்லவில்லை. விசிலை விடு விவசாயியைத் தொடு. இந்த இடைத்தேர்தல் என்பது வெறும் கட்சிகளுக்கு இடையேயான போட்டி மட்டுமல்ல. தற்போதுள்ள தவறான அரசியல் அமைப்பைக் கேள்வி கேட்கவும், உண்மையான மாற்றத்தை உருவாக்கவும் மக்களுக்குக் கிடைத்துள்ள ஒரு நல்வாய்ப்பு.
வரிப்பணம் வீணாவதைத் தடுக்க சட்டம் தேவை:
வாக்குக்குப் பணம் வாங்காமல் மக்கள் அனைவரும் சிந்தித்துத் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும். சொந்த காரணங்களுக்காகவோ அல்லது கட்சி மாறுவதற்காகவோ பதவியை ராஜினாமா செய்துவிட்டு மக்கள் மீது இடைத்தேர்தலைத் திணிப்பவர்களே தேர்தலுக்கான முழு செலவையும் ஏற்க வைக்க வேண்டும்.
இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டு, பின்னர் ராஜினாமா செய்யப்படும் தொகுதிகளில் மீண்டும் இடைத்தேர்தல் நடத்தக் கூடாது. மாறாக, அத்தொகுதியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற வேட்பாளரையே சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்ய வேண்டும். ஒட்டுமொத்த இந்தியத் தேர்தல் அமைப்பிலும் இத்தகைய புதிய சட்ட விதியைக் கொண்டு வர வேண்டும்; அதன் மூலமே பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவது தடுக்கப்படும்\” என்று சீமான் ஆவேசமாகத் தெரிவித்தார்.
#Seeman #NTK #Dharapuram #ByElection2026 #Maduranthakam #KarthikaNTK #ElectionCommission #TNPolitics #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduNews #LatestNews #TamilNewsLive