சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான அனோஜன் சிவராசாவை காப்பாற்றுவதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அனோஜன் சிவராசா தொடர்பான சம்பவம் குறித்து தகவல் கிடைத்த நாள் முதல், இராஜதந்திர மட்டத்திலும் இலங்கையின் வெளிநாட்டு தூதரகங்களின் ஊடாகவும் தேவையான தலையீடுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அவரை தண்டனையிலிருந்து காப்பாற்றுவதற்காக சவூதி அரேபிய அரசாங்கத்திடம் மன்னிப்புக் கோருவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக இலங்கை ஜனாதிபதியின் சார்பில் சவூதி அரேபிய மன்னருக்கு விசேட கடிதமொன்றை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குறித்த கடிதத்தை சவூதி அரேபிய மன்னரிடம் நேரடியாகக் கையளிப்பதற்காக, பிரதி சபாநாயகரின் தலைமையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்றை சவூதி அரேபியாவுக்கு அனுப்ப அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையின் ஊடாக அனோஜன் சிவராசாவுக்கு மன்னிப்பு வழங்குமாறும், அவருக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை தளர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் சவூதி அரேபிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அனோஜன் சிவராசாவின் வழக்கு நடவடிக்கைகளுக்காக இதுவரை செலவிடப்பட்டுள்ள பணத்தை அரசாங்கம் மீளச் செலுத்தும் எனவும், எதிர்காலத்தில் இந்த வழக்குக்காக செலவிடப்படும் முழுமையான தொகையையும் அரசாங்கமே ஏற்கும் எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த வழக்குடன் தொடர்புடைய சட்ட நடவடிக்கைகளுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்குவதற்காக ஜனாதிபதி சட்டத்தரணிகளான உபுல் குமாரப்பெரும மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா ஆகியோர் தங்களது சொந்த செலவில் தலையிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அனோஜன் சிவராசாவை காப்பாற்றுவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி ஏற்கனவே சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, சட்டமா அதிபர் திணைக்களம், வெளிவிவகார அமைச்சு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி விசேட கலந்துரையாடலை நடத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கலந்துரையாடலின் போது, சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞரை சட்ட ரீதியாகவும் இராஜதந்திர ரீதியாகவும் எவ்வாறு காப்பாற்றுவது என்பது தொடர்பில் ஆராயப்பட்டதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.