சிவராஜா அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கான கடிதத்தை சவுதி அரேபிய அதிகாரிகளிடம் ஓப்படைப்பதற்காக பிரதிசபாநாயகர் ரிஸ்விசாலிக் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு சவுதி அரேபியா செல்லவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
சவுதி அரேபியா செல்லவுள்ள குழுவில் அரச எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் இடம்பெறவுள்ளனர்.
ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தில் கலந்துகொள்ளும்வேளை சவுதிஅரேபிய வெளிவிவகார அமைச்சரை சந்திக்கவுள்ளேன் அதன் போது மரணதண்டனைக்கான மாற்றீடுகள் குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வேன்.
ஜனாதிபதி சட்டத்தரணிகள் பைசர் முஸ்தபாவும்,உபுல் குமாரபெருமவும் சவுதி அரேபியா பயணமாவதற்கு இணங்கியுள்ளனர்.சவுதி அரேபியாவிற்கான இலங்கை தூதரகம் அனோஜனுடன் தொடர்ந்தும் நேரடி தொடர்பில் உள்ளது,அவருக்கு தனது ஆதரவை வழங்கி வருவதுடன்,அந்த நாட்டின் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருகின்றது.
அனோஜனின் வழக்கு தொடர்பில் எதிர்கால செலவுகள் அனைத்தையும் பொறுப்பேற்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது,கொழும்பில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்துடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம்.இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் தன்னால் ஆனா அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருகின்றது,அனோஜனின் குடும்பத்திற்கு அனைத்து விடயங்களையும் தெளிவவுபடுத்தி வருகின்றோம் என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.