யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் திலீபனின் நினைவாக அமைக்கப்பட்ட சிலை திறப்பு நிகழ்வில் பாடசாலை மாணவர்களைப் பங்கேற்கச் செய்தமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் அமல் எதிரிசூரியவிடம் தேசிய ஆசிரியர் இயக்கத்தினால் திங்கட்கிழமை (21) முறைப்பாட்டுக் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.
முறைப்பாடு தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிப்பதற்காக தேசிய ஆசிரியர் இயக்கத்தின் ஏற்பாட்டில் திங்கட்கிழமை (21) பத்தரமுல்லையில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தேசிய ஆசிரியர் இயக்கத்தின் பொதுச் செயலாளர் சந்துன் பண்டார போதரகம மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
2026 செப்டெம்பர் 15ஆம் திகதி நல்லூர் பகுதியில் நடைபெற்ற திலீபன் நினைவேந்தல் நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக பாடசாலை மாணவர்கள் இவ்வாறான நிகழ்வில் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள் உள்ளிட்ட அதிகாரிகளின் செயற்பாடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடனேயே கல்வி அமைச்சிடம் முறைப்பாடு கையளித்தோம். இந்த முறைப்பாட்டுக் கடிதம் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் அமல் எதிரிசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு வழங்குவதற்காக கல்வி அமைச்சுக்கு சென்றபோது, சம்பவம் இடம்பெற்று ஆறு நாட்கள் கடந்திருந்தபோதிலும், அது தொடர்பில் தங்களுக்கு எவ்வித தகவலும் தெரியாது என அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தது வருத்தமளிக்கிறது.
பாடசாலை மாணவர்கள் பாடசாலை சீருடையில் இவ்வாறான நிகழ்வுகளில் பங்கேற்கச் செல்லும்போது அதிபர் மற்றும் உரிய கல்வி அதிகாரிகளின் அனுமதி அவசியமானது. மாணவர்களை நல்லூருக்கு அழைத்துச் சென்றது யார், அதற்கு அனுமதி வழங்கியது யார் என்பது தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.
தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் முன்னாள் தலைவராக இருந்த திலீபனை நினைவுகூரும் நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் பங்கேற்கச் செய்யப்பட்டமை தொடர்பில் கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் இந்த விடயத்தில் அமைதியாக இருக்காமல் தமது அதிகாரத்துக்கு அமைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பவம் தொடர்பில் ஆழமான விசாரணை நடத்தி தவறிழைத்தவர்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
அதேவேளை, கடந்த காலங்களில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்களில் சட்டத்தை நடைமுறைப்படுத்திய அதிகாரிகள், தற்போதைய சம்பவம் தொடர்பிலும் பாரபட்சமின்றி செயற்பட வேண்டும்.
பாடசாலை மாணவர்களை அரசியல் அல்லது நினைவேந்தல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த அனுமதிக்க முடியாது. சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தி, தவறு இழைத்தவர்கள் அடையாளம் காணப்பட்டால் அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சந்துன் பண்டார போதரகம மேலும் வலியுறுத்தினார்.