பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு தமிழ்நாடு வழியாக பீகார், ராஜஸ்தான், மேற்கு வங்கம் மற்றும் கேரளாவை இணைக்கும் 4 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளதுடன், அதற்கான முன்பதிவு செப்டம்பர் 20 அன்று தொடங்குகிறது.
முதல் சிறப்பு ரயிலாக போத்தனூர் – பரௌனி விரைவு ரயில், அக்டோபர் 4 முதல் நவம்பர் 1 வரை குறிப்பிட்ட நாட்களில் போத்தனூரிலிருந்து காலை 06.15 மணிக்கு புறப்படும். இது திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி மற்றும் பெரம்பூர் ஆகிய நிலையங்கள் வழியாகப் பயணித்து, மூன்றாம் நாள் மதியம் பரௌனியை சென்றடையும். மறுமார்க்கத்தில் அக்டோபர் 7 முதல் நவம்பர் 4 வரை இதற்கான சேவை இயக்கப்படும்.
இரண்டாவதாக, திருவனந்தபுரம் வடக்கு – சந்திரகாச்சி விரைவு ரயில் அக்டோபர் 2 முதல் அக்டோபர் 30 வரை குறிப்பிட்ட நாட்களில் பிற்பகல் 02.15 மணிக்குத் புறப்படும். போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி மற்றும் திருத்தணி வழியாகப் பயணிக்கும் இந்த ரயிலின் மறுமார்க்க சேவை அக்டோபர் 5 முதல் நவம்பர் 2 வரை சந்திரகாச்சியில் இருந்து புறப்படும்.
சென்னையைச் சேர்ந்த பயணிகளுக்குப் பயன்படும் வகையில், திருவனந்தபுரம் மத்திய நிலையம் – மாதார் சந்திப்பு இடையேயான சிறப்பு ரயில் பெரம்பூர் நிலையத்தில் நின்று செல்லும். அக்டோபர் 21 முதல் நவம்பர் 25 வரை குறிப்பிட்ட நாட்களில் புறப்படும் இந்த ரயில், கேரளாவை ராஜஸ்தானுடன் இணைக்கிறது. இதன் மறுமார்க்க சேவை அக்டோபர் 24 முதல் நவம்பர் 28 வரை செயல்படும்.
நான்காவதாக, எர்ணாகுளம் – பாட்னா சிறப்பு ரயில் அக்டோபர் 2 முதல் அக்டோபர் 30 வரை குறிப்பிட்ட நாட்களில் இயக்கப்படுகிறது. இது போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி மற்றும் பெரம்பூர் வழியே பயணிக்கும். மறுமார்க்கமாக பாட்னாவில் இருந்து அக்டோபர் 6 முதல் நவம்பர் 3 வரை இயங்கும். பண்டிகைக் காலத்தில் சொந்த ஊர் செல்லத் திட்டமிடும் பொதுமக்கள் இந்த சிறப்பு ரயில் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.