ஜப்பானில் நடைபெறவுள்ள அய்ச்சி-நகோயா 2026 ஆசிய விளையாட்டு விழாவில் நடைபெறவுள்ள ஆடவர் மற்றும் மகளிர் ரி20 கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றவுள்ள இலங்கை கிரிக்கெட் அணிகள் வெளியாகியுள்ளது.
20ஆவது ஆசிய விளையாட்டு விழாவில் 25 வகையான விளையாட்டுக்களில் இலங்கை சார்பாக பங்குபற்றவுள்ள அணி விபரங்களை இலங்கை தேசிய ஒலிம்பிக் குழு வெளியிட்டுள்ளது.
அதில் ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ள இலங்கை வீரர்கள், விராங்கனைகளின் பெயர்களும் அடங்குகின்றன.
ஆடவர் அணியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரும் தமிழ் யூனியன் அத்லெட்டிக்ஸ் மற்றும் கிரிக்கெட் கழகத்தின் சுழல்பந்துவீச்சாளருமான விஜயகாந்த் வியாஸ்காந்த் இடம்பெறுகின்றார்.
இலங்கை ஆடவர் அணிக்கு சஹான் ஆராச்சிகே தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை மகளிர் அணிக்கு வழமையான அணித் தலைவி சமரி அத்தபத்து தலைவராக செயற்படுவார்.
ஆசிய விளையாட்டு விழாவில் ஆடவர் கிரிக்கெட் போட்டியில் டெஸ்ட் விளையாடும் நாடுகளான இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகியன நேரடியாக கால் இறுதிச் சுற்றிலிருந்து விளையாடும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான், ஜப்பான், நேபாளம் (ஏ குழு), ஹொங்கொங், ஓமான், மலேசியா (பி குழு) ஆகியன தகுதிகாண் சுற்றில் லீக் முறையில் விளையாடும்.
லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் கால் இறுதிகளில் விளையாட தகுதிபெறும்.
இதேவேளை மகளிர் பிரிவில் 8 அணிகள் மாத்திரம் பங்குபற்றுவதால் நோக் அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்படும்.
இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையிலான 3ஆவது கால் இறுதிப் போட்டி நிஷின் மைதானத்தில் எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறும்.
அதே தினத்தன்று நடைபெறும் 4ஆவது கால் இறுதிப் போட்டியில் வரவேற்பு நாடான ஜப்பானை இந்தியா எதிர்த்தாடும்.
18ஆம் திகதி நடைபெறவுள்ள முதலாவது கால் இறுதியில் பங்களாதேஷ் – சீனா அணிகளும் இரண்டாவது கால் இறுதியில் பாகிஸ்தான் – தாய்லாந்து அணிகளும் மோதவுள்ளன.
ஹாமன்ப்ரீத் கோர் தலைமையில் முழுமையான இந்திய மகளிர் அணி இப் போட்டியில் பங்குபற்றுகின்றது.
ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் இலங்கைக்கு பதக்கங்கள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
மகளிர் கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் 17ஆம் ஆரம்பமாவதுடன் ஆடவர் கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் 24ஆம் திகதி ஆரம்பமாகும்.