சென்னை:
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்யின் பதிலுரைக்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தொடர் அமளியில் ஈடுபட்டதால், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்குப் பேச அளித்த அனுமதியைச் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அதிரடியாக ரத்து செய்தார்.
இன்று சட்டப்பேரவையில் அரங்கேறிய முக்கிய நிகழ்வுகளின் முழுமையான விவரம்:
-
முதலமைச்சர் விஜய்யின் பதிலுரை: காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், போதைப்பொருள் ஒழிப்பு, பெண்கள் பாதுகாப்பு மற்றும் காவல் மரணங்கள் தடுப்பு ஆகியவை குறித்து அரசின் நடவடிக்கைகளை விளக்கினார். தொடர்ந்து பேசிய அவர், பெண்களுக்கு எதிராக ஆபாசமாகப் பேசுபவர்கள் மீதும், வன்மத்தைத் தூண்டும் வகையில் பேசுபவர்கள் மீதும் சட்டம் தன் கடமையைச் செய்யும் என எச்சரித்தார்.
-
திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுகள்: சர்க்காரியா கமிஷன் அறிக்கையைச் சுட்டிக்காட்டி வீராணம் திட்டம் மற்றும் முரசொலி கட்டட விவகாரங்களை எழுப்பிய முதலமைச்சர், டாஸ்மாக் மூலமாக 7.5% முதல் 10% வரை திமுக கட்சி நிதி பெற்றதாக அமலாக்கத்துறை கூறியுள்ளதையும் பேரவையில் வாசித்துக் காட்டினார். இதில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்குத் தொடர்புள்ளதாகக் கூறி, “ஊழல் இருக்கும் இடத்தில் திமுக இருக்கும்; திமுக இருக்கும் இடத்தில் ஊழல் இருக்கும்” என மிகக் கடுமையாக விமர்சித்தார்.
-
திமுக எம்.எல்.ஏ.க்கள் தர்ணா: முதலமைச்சரின் இந்த உரைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்த திமுக உறுப்பினர்கள், சபாநாயகர் இருக்கைக்கு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பதாகைகளைக் காட்டித் தொடர் முழக்கங்களை எழுப்பிய அவர்களுக்கு இடையே, மானியக் கோரிக்கை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதாகச் சபாநாயகர் அறிவித்தார்.
-
முதலமைச்சரின் தலையீடு: விதிகளை மீறுபவர்கள் அவைக் காவலர்களால் வெளியேற்றப்படுவார்கள் எனச் சபாநாயகர் எச்சரித்த நிலையில், முதலமைச்சர் விஜய் எழுந்து, “அவர்கள் பேசுவதற்கு வாய்ப்பு கொடுங்கள்” எனச் சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார். முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்ற சபாநாயகர், திமுக எம்.எல்.ஏ.க்களைத் தங்கள் இருக்கைகளில் சென்று அமருமாறும், எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதற்கு அனுமதி அளிப்பதாகவும் தெரிவித்தார்.
-
அனுமதி ரத்து செய்யப்பட்டது ஏன்?: திமுக எம்.எல்.ஏ.க்கள் இருக்கைக்குத் திரும்பியதும் பேசிய சபாநாயகர், “முதலமைச்சர் பேசும்போது நீங்கள் அமைதியாக இருந்திருந்தால் நானே பேச அனுமதித்திருப்பேன். ஆனால் அவரது பேச்சு வெளியே போகக் கூடாது என்ற நோக்கத்தில் நீங்கள் அலுத்துப் போகும் வரை குரல் கொடுத்தீர்கள்” என்று சுட்டிக்காட்டினார். சபாநாயகர் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போதே, திமுகவினர் மீண்டும் எழுந்து நின்று கூச்சலிடத் தொடங்கினர்.
-
சபாநாயகரின் இறுதி முடிவு: திமுகவினரின் இந்தத் தொடர் இடையூறால் ஆவேசமடைந்த சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், “இப்படியெல்லாம் எழுந்து நின்று என்னை நிர்ப்பந்தப்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. என் முடிவை எதிர்க்கட்சித் தலைவர் ஏற்றுக்கொண்டாக வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதை நான் இப்போது அனுமதிப்பதாக இல்லை” என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
Hashtags:
#TNAssembly #SpeakerJCDPrabhakar #ChiefMinisterVijay #UdhayanidhiStalin #DMK #TVKGovt #TNPolitics #TamilNaduNews #ChennaiNews #TamilNews #BreakingNewsTamil #TrendingNewsTamil