சென்னை
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் சில தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாறியுள்ளதால், மாநில மாணவர்களுக்கான 700 எம்பிபிஎஸ் (MBBS) இடங்கள் அதிரடியாக அகில இந்திய ஒதுக்கீட்டிற்குச் சென்றுள்ளது தமிழக கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் பிஎஸ்சி நர்சிங் படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு அடிப்படையிலான முதல் சுற்றுக் கலந்தாய்வு ஆகஸ்ட் 04-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரிகளைப் பதிவு செய்யும் பணி ஆகஸ்ட் 07 முதல் 12-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தற்போது அகில இந்திய ஒதுக்கீட்டில் மொத்தம் 31,728 மருத்துவ இடங்கள் உள்ளன.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஏற்கனவே செயல்பட்டு வந்த சில தனியார் மருத்துவக் கல்லூரிகள் நடப்பாண்டில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கான (Deemed University) அங்கீகாரத்தை புதிதாகப் பெற்றுள்ளன. இதனால், இதுவரை தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழுவின் மூலம் மாநில அரசால் நிரப்பப்பட்டு வந்த இந்த இடங்கள் அனைத்தும், தற்போது மத்திய அரசின் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு மாறியுள்ளன.
இதன்படி, 2026-2027-ஆம் கல்வியாண்டில் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் இன்ஸ்டியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் கல்லூரியின் 200 எம்பிபிஎஸ் இடங்கள், சமயபுரம் சீனிவாசன் மருத்துவக் கல்லூரியின் 250 இடங்கள் மற்றும் ஒசூர் செயின்ட் பீட்டர் மருத்துவக் கல்லூரியின் 250 இடங்கள் என ஒட்டுமொத்தமாக 700 மருத்துவ இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்குச் சென்றுள்ளது உறுதியாகியுள்ளது.
ஆறுதல் செய்தி: தமிழகத்திற்கு 950 இடங்கள் கூடுதல்!
ஒருபுறம் 700 இடங்கள் கைநழுவினாலும், நடப்பாண்டில் தமிழ்நாட்டில் உள்ள 78 மருத்துவக் கல்லூரிகளில் ஒட்டுமொத்தமாக 13,999 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
இதில், 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஏற்கனவே இருந்த 5,199 இடங்களுடன் கூடுதலாக 150 இடங்கள் அதிகரிக்கப்பட்டு 5,349 ஆக உயர்ந்துள்ளது. இதேபோன்று 41 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 7,850 ஆக இருந்த இடங்களுடன் கூடுதலாக 800 இடங்கள் சேர்க்கப்பட்டு 8,650 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் நடப்பாண்டில் தமிழகத்திற்கு ஒட்டுமொத்தமாக 950 எம்பிபிஎஸ் இடங்கள் கூடுதலாகக் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
#TNMedicalCounselling #NEET2026 #MBBSAdmission #TamilNaduNews #Chennai #MedicalSeatsTN #AIQSeats #MedicalStudents #ViralNews #TrendingTN #LatestNewsTN #TNEducation #TNPolitics