நீதிமன்ற கட்டமைப்பில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொண்டு தீர்வு காணும் வகையில், அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் உள்ளடக்கிய விசேட செயற்குழுவொன்றை நியமிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நிலவும் வழக்குத் தேக்க நிலைமை, நீதியைப் பெறுவதில் ஏற்படும் தாமதம் மற்றும் நீதித்துறை செயற்றிறனை மேம்படுத்தவேண்டிய அவசியம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றங்களில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளை விரைவுபடுத்துவதற்கான நடைமுறைத் தீர்வுகள், சட்ட மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள், நீதிமன்ற வளங்களை அதிகரித்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆராயும் பொறுப்பு இந்த விசேட செயற்குழுவுக்கு வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், நீதித்துறை, சட்டத்துறை, வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் பங்களிப்புடன் செயற்குழு அமைக்கப்படுவதன் மூலம் நடைமுறைக்கு ஏற்ற பரிந்துரைகளை முன்வைக்க முடியும் என்றும் அந்தக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
நீதிமன்றங்களில் வழக்குத் தேக்கம் குறைக்கப்பட்டு, பொதுமக்கள் தாமதமின்றி நீதியைப் பெறும் சூழல் உருவாக்கப்பட வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.