ஒன்ராறியோவின் மிட்லேண்ட் (Midland) பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை தற்போது கொலை வழக்க விசாரணை (Homicide) என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
இத்துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர் எட்டோபிகோவைச் (Etobicoke) சேர்ந்த ட்ரைஸ் ஜேம்ஸ் (Tryce James) என்ற 18 வயது இளைஞர் என ஒன்ராறியோ மாகாணக் காவல்துறை (OPP) தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு சுமார் 8.00 மணியளவில் கிங் வீதியில் உள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் விரைந்ததாகக் காவல்துறை கூறியுள்ளது.
சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள், துப்பாக்கிக் காயங்களுடன் இருந்த ஒருவரைக் கண்டறிந்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும் அவர் உயிரிழந்துவிட்டதாகப் பின்னர் அறிவிக்கப்பட்டது.
இது ஒரு தனிப்பட்ட சம்பவம் என்றும், பொதுமக்களின் பாதுகாப்பிற்குப் பெரிய அளவிலான அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்றும் புலனாய்வாளர்கள் நம்புகின்றனர்.
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால், அப்பகுதியில் காவல்துறையின் நடமாட்டத்தை இன்னும் காணக்கூடியதாக இருக்கும்.
சந்தேகநபர்கள் குறித்தோ அல்லது சந்தேகநபர் ஆபத்தான ஆயுதங்களை வைத்துள்ளாரா என்பது குறித்தோ எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.
துப்பாக்கிச் சூடு தொடர்பான பிற விவரங்களை வெளிப்படுத்தாமல் காவல்துறையினர் தீவிர மௌனம் காத்து வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பான தகவல்கள், காணொளிகள் அல்லது டேஷ்கேம் (dash cam) காட்சிகளை வைத்துள்ள எவரையும் தெற்கு ஜார்ஜியன் பே OPP காவல்துறையைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்