இறைமையை மீட்கும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும். அது ஆயுதப் போராட்டமா, அறவழிப் போராட்டமா என்பதை எங்களுக்கு எதிராக யார் போர் தொடங்குகிறாரோ, அவர்தான் அந்த ஆயுதத்தைத் தீர்மானிக்க வேண்டும். அதனால் தான் நாங்கள் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை இப்பொழுதும் இலங்கை அரசுதான் தீர்மானிக்க வேண்டும் – அது அறவழியா, ஆயுதமா என்பதை. காலம் தான் அதற்குரிய பதிலையும் சொல்லும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.
சமகால அரசியலும் போராளிகளின் வகிபாகமும் வரலாற்றின் வேர்கள் விருது வழங்கும் விழாவரலாற்றின் வேர்கள் விருது வழங்கும் நிகழ்வும் நேற்று மட்டக்களப்பில் இடம் பெற்றது.
போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் மாவட்ட ரீதியாக இடம்பெற்று வரும் வரலாற்றின் வேர்கள் விருது வழங்கும் நிகழ்வின் முன்றாவது நிகழ்வானது மட்டக்களப்பு அரசடி தேவநாயகம் மண்டபத்தில் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி.ராதிகா நிதர்சனா தலைமையில் இடம்பெற்றது.
முதல் நிகழ்வாக மாவீரர் ஒருவரின் தாயாரினால் பிரதான சுடர் ஏற்றப்பட்டதுடன் தாயக விடுதலைக்கான பாதையில் அர்ப்பணிப்பான பணியாற்றி படுகொலைசெய்யப்பட்ட தமிழ் தேசிய பற்றாளர்களின் உருவப்படத்திற்கு ஈகைச் சுடர் ஏற்றப்பட்டதனைத் தொடர்ந்து மலர் மாலை அணிவிக்கப்பட்டு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதனைத் தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் சிவில் சமூக செயற்பாட்டாளர் வேலன்சுவாமிகள், பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், வைத்தியர் இளைதம்பி ஸ்ரீநாத், கவீந்திரன் கோடிஸ்வரன், சிவஞானம் ஸ்ரீதரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பாக்கியச்செல்வம் அரியநேந்திரன், சீனித்தம்பி யோகேஸ்வரன் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.நடராசா மற்றும் சர்வமத தலைவர்கள்
,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.
இதன் போது தமிழ் தேசிய போராட்டத்திற்காக தம்மை அர்ப்பணித்த சமூகப்பற்றாளர்கள் மற்றும் கல்வியியலாளர்கள் என பலர் இதன்போது விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், போராளிகளின் பிள்ளைகளுக்கும் இதன்போது கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இதன்போது உரையாற்றிய சிறிதரன் எம்.பி.,
ஜனநாயகம் என்பதை விடுதலைப் புலிகள் மிகத் தெளிவாகவே கடைப்பிடித்து வந்தார்கள். உங்களுக்குத் தெரியும், சிறுவர்களைப் படையில் சேர்க்கிறார்கள் என்ற செய்தி வந்தபொழுது, அந்தக்காலத்தில் இருந்த ஐக்கிய நாடுகள் சபையினுடைய பிரதிநிதி ஒலாரா ஒட்டுனு அவர்களுக்குத் தலைவர் பிரபாகரன், தமிழீழ விடுதலைப் புலிகள் எழுதிய கடிதம் அவர்களுடைய நெஞ்சைத் தொட்டிருந்தது. மிக மனித அபிமானத்தோடும் கண்ணியத்தோடும் நடக்கிறார்கள் என்பதை அவரே உறுதி செய்தார். இது விடுதலைப் புலிகளுக்குக் கிடைத்த மிகப்பெரிய சான்று.
அதேபோலத்தான் சுனாமி நடைபெற்றபொழுது, அமெரிக்காவினுடைய மேனாள் ஜனாதிபதி கிளாரண்டன் (கிளிண்டன்) அவர்கள் கொழும்பு வந்தபொழுது, புனர்வாழ்வுக் கழகத்தினுடைய பொறுப்பாளராக இருந்த ரெஜியை கொழும்பிலே வைத்து கிளிண்டன் சந்தித்தார். அது அவருக்குக் கொடுக்கப்பட்ட அங்கீகாரம். அவர் வடகிழக்கிற்கு வரவில்லையே தவிர, அவரை கைலாகு கொடுத்துச் சந்தித்தார். இது விடுதலைப் புலிகளோடு இருந்த பண்பையும் மரியாதையையும் சொல்லியிருக்கிறது.
உங்களுக்கு நன்றாகத் தெரியும், விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்ட ராணுவத்தினர் சிறையிலிருக்கிறபொழுது குடும்பத்தினர் பார்ப்பதற்காகச் சென்றார்கள். அங்கே பார்க்கச் சென்ற பெண்கள் அவரோடு தங்கி வந்தார்கள். அப்பொழுது ஒரு குடும்பம் சார்பாக, அவருடைய மனைவி – ஒரு வீரருடைய மனைவி கருவுற்றிருக்கிறார் என்ற செய்தியை அவர் கேட்டார். “எனது மனைவி கருவுற்றிருக்கிறார், அவர் கடிதம் எழுதியிருக்கிறார், அவரை விடுதலை செய்யுங்கள்” என்று மனைவி தேசியத் தலைவர் பிரபாகரனுக்குக் கடிதம் எழுதியிருந்தார். மனித அபிமானத்தோடு அந்த வீரரை உயிரோடு ஒப்படைத்தவர் பிரபாகரன். அதனால் தான் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் மனிதாபிமானம் என்பது மேலோங்கியிருந்தது.
2006-ஆம் ஆண்டு இறுதியிலே வாகரையில் நடந்த யுத்தத்தின் பொழுதும் சரி, 2009-ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடந்த யுத்தத்தின் பொழுதும் சரி, உணவனுப்பாமல் மக்களைப் பட்டினி போட்டுக் கொன்றவர்கள் இலங்கை அரசு. அதிலும், 2009-ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 4,25,000 பேர் முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவுக்குள் அடக்கப்படுகிற பொழுது, 70,000 பேர் தான் இருக்கிறார்கள் என்று உணவை அனுப்பாமல் கொடூரமாகக் கொலை செய்தது கோத்தபாயவினுடைய அரசு.
அந்தக் காலகட்டத்தில் கூட, உலகத்தில் யாருக்கும் இல்லாத மனித அபிமானம், அதைப் பற்றிப் பேசாதவர்கள் விடுதலைப் புலிகள் மனித அபிமானத்தோடு நடக்க வேண்டும், விடுதலைப் புலிகள் ஜனநாயகத்தை மதிக்க வேண்டும் என்ற வார்த்தைகளை இப்பொழுது எழுதப் பலபேர் முனைகிறார்கள். சம்பந்தன் ஐயா அவர்கள் கூடத் தலைவர் பிரபாகரனுக்குச் சொன்னதாக, “நீங்கள் மனித அபிமானத்தை மதிக்க வேண்டும், ஜனநாயகத்தை மதிக்க வேண்டும்” என்று சொன்னார் என்று சிலர் கதை விடுகிறார்கள், கயிறு விடுகிறார்கள்.
சம்பந்தன் ஐயா என்னோடு பேசியிருந்தார். 2018-ஆம் ஆண்டு இடைக்கால வரைவு பாராளுமன்றத்தில் வந்தபொழுது, அந்த இடைக்கால வரைவு பற்றி நான் 38 நிமிடங்கள் பேசியிருந்தேன். அந்தப் பேச்சுக்குப் பிற்பாடு கூட ஒருநாள் வெள்ளிக்கிழமை அவரோடு இருந்து பேசுகிற பொழுது அவர் சொன்னார்: “ஆயுதங்களைக் கையிலே வைத்திருக்கிற ஒருவன் தன்னுடைய முடிவுகளை ஆயுத முனையில் தான் எடுப்பான். ஆகவே நாங்கள் ஜனநாயகம் பற்றி ஆயுதப் போராட்டத்திலே அப்படி நடந்தது, இப்படி நடந்தது என்று நாங்கள் கேட்கத் தேவையில்லை. ஆனால், இப்பொழுது நாங்கள் செய்கிற பயணம் ஜனநாயக வழியானது. அந்த ஜனநாயகத்தை நாங்கள் சரியாகச் செய்கிறோமா, எங்களுடைய முடிவுகள் சரியானதாக இருக்கிறதா என்பதில் தான் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.
அப்பொழுது சிலர் சொன்னார்கள், “தமிழர்களை, சில முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்தார்கள் விடுதலைப் புலிகள், விடுதலைப் புலிகள் அனுப்பினார்கள்” என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், நான் அதைப் பற்றித் தொடர்ந்து பேசினால் அது ஒரு வேற விபரீதமாக மாறும். ஏனென்றால், தமிழ் பேசும் முஸ்லிம் சகோதரர்களிடமும் தமிழர்கள் பற்றிய காயங்கள் உண்டு. தமிழர்களிடமும் முஸ்லிம் சகோதரர்கள் தொடர்பான நிறைந்த காயங்கள் உண்டு. இன்னும் அந்த காயங்கள் ஆற்றுப்படுத்தப்படவில்லை.
ஹிஸ்புல்லா கூடச் சொன்னார், “எனக்கு ஆயுதம் தந்தது, நான் துப்பாக்கி எடுத்துச் சுட்டேன், காளி கோயிலை இடித்தேன்” என்று அவர் சொல்ற வீடியோ இருக்கு, நேரே வீடியோ இருக்கு. ஹிஸ்புல்லா இப்ப முஸ்லிம் காங்கிரஸில் இருக்கிறார். ஆகவே, அவர் சொன்னது உண்மை இருக்கு. அவர் சொன்ன வீடியோவையும் போட்டுக் காட்டுறேன். ஆகவே, இது நடந்தது; எல்லாப் பக்கமும் நடந்த உண்மைகள் இருக்கின்றன.
அந்த உண்மைகளுக்கு அப்பால், அவற்றையெல்லாம் மறைத்து ஏதோ விடுதலைப் புலிகள் ஜனநாயகத்தை மதிக்காதவர்கள் அல்லது விடுதலைப் புலிகள் மனிதாபிமானத்தை மதிக்காதவர்கள் என்ற போர்வையில் ஒரு பிரச்சாரத்தை யாருக்காக இவர்கள் செய்கிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், சம்பந்தன் ஐயா அதிலே மிகத் தெளிவாக இருந்தார். இருந்தாலும் சில நேரங்களில் சில விடயங்களுக்காகச் சில வார்த்தைகளைப் பேசித்தான் ஆக வேண்டும், சில அந்த விடயங்களில் இருந்து தான் ஏன் சிலரைக் கவர்ந்து கொள்வதற்காகப் பேசித்தான் ஆக வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இருந்தாலும் கூட, இந்தக்கால கட்டங்களில் நாங்கள் ஒவ்வொரு காலகட்டங்களில் மக்களுடைய திரட்சி என்பது புலிகளுக்குப் பின்னால் தான் இருந்தது. 87-ஆம் ஆண்டு இலங்கை-இந்திய ஒப்பந்தம் எழுதப்பட்டுத் தலைவர் இந்தியாவிலிருந்து இறங்கி வந்து, அவர் சுதுமலையிலே கூடுகிறபொழுது எத்தனை லட்சம் மக்கள் அங்கே கூடியிருந்தார்கள்? ஆகவே, மக்கள் ஆதரவோடு இருந்தார்கள்.
இறுதியுத்தம் நடக்கும் பொழுது மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணத்தினுடைய கிழக்குப் பகுதி மக்கள் யாருக்குப் பின்னாலே போனார்கள்? ஆகவே, விடுதலைப் புலிகள் என்பது சாதாரண இயக்கமல்ல் அது ஒரு சாதாரண போராட்ட இயக்கமல்ல. இந்த உலகத்தினுடைய வரைபடத்துல, இந்த வரலாற்றில 20-ஆம் நூற்றாண்டில், 21-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உலகத்தினுடைய கண்களை முழுதும் பார்த்துக் கொண்டிருக்க வைத்திருக்கிறது.
இப்பொழுது கூட ஒரு செய்தியைப் பார்த்து, தேரர் ஒருவர் கூறியிருக்கின்றார் பிரபாகரன் இல்லை, ஆனால் பிரபாகரனால் உருவாக்கப்பட்டவர்கள் இப்பொழுதும் இருந்து கொண்டிருக்கிறார்கள்” என்று எவ்வளவு தூரம் அவர்கள் பயப்படுகிறார்கள்! ஆகவேதான், நாங்கள் போரோடு வாழ்ந்தஇனம், நாங்கள் ஒரு இறமைக்காக வாழ்ந்த இனம். எங்களிடம் இருந்த இறமையும் கண்ணியமும் என்பது இழந்துபோன இறமையைத்தான் நாங்கள் கேட்கிறோம். நாங்கள் புதிதாக ஒன்றும் கேட்கவில்லை.
இந்த நாட்டினுடைய சொந்தக்காரர்கள் நாங்கள். இந்த நாட்டினுடைய முதல் குடிகள் நாங்கள். ஆகவே, நாங்கள் இந்த மண்ணிலே – குறிப்பாகத் தொடர் நிலப்பரப்பான வடகிழக்கிலும் – நாங்கள் எங்களுடைய மண்ணோடு வாழ்ந்த உரிமையைக் கேட்கிறோம். அதனை ஒல்லாந்தர்கள் பறித்தார்கள், போர்த்துக்கேயர்கள் பறித்தார்கள், ஆங்கிலேயர்கள் பறித்தார்கள், பிறகு சிங்களவர்கள் பறித்து வைத்திருக்கிறார்கள்.
அந்த இறமையை மீட்கும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும். அது ஆயுதப் போராட்டமா, அறவழிப் போராட்டமா என்பதை எங்களுக்கு எதிராக யார் போர் தொடங்குகிறாரோ, அவர்தான் அந்த ஆயுதத்தைத் தீர்மானிக்க வேண்டும். அதனால் தான் நாங்கள் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை இப்பொழுதும் இலங்கை அரசுதான் தீர்மானிக்க வேண்டும் – அது அறவழியா, ஆயுதமா என்பதை. காலம் தான் அதற்குரிய பதிலையும் சொல்லும்.
நாங்கள் அவற்றின் மீது ஆர்வம் கொண்டவர்கள் அல்ல. அதனால் தான் தலைவர் பிரபாகரன் கூட 1985-ஆம் ஆண்டு அனிதா பிரதாப் அவர்களுக்குக் கொடுத்த செய்தியிலே சொன்னார்: “நாங்கள் ஆயுதங்களை விரும்பித் தூக்கவில்லை. எங்களுடைய மக்களைக் காப்பதற்காக, எங்கள் மீது ஆயுதத்தைத் திணித்தார்கள்; அதனால் ஆயுதங்களை நாங்கள் எடுக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாக்கப்பட்டோம்”. இதுதான் நியதியும் வரலாறும்.
ஆகவேதான், வரலாற்றினுடைய இந்தப் பக்கங்களைத் தாண்டி வந்த போராளிகள் நீங்கள். உங்களிடம் இருக்கிற பக்கம் மிக உறுதியானது. எத்தனை போராளிகள் இன்று எத்தனையோ தொழில் அதிபர்களாக இருக்கிறார்கள். எத்தனை போராளிகள் இன்று இந்த மண்ணைக் கட்டியமைக்கக் கூடிய மிகப்பெரிய சக்திகளாக இருக்கிறார்கள். நீங்கள் ஒன்றைச் சிந்தித்துப் பாருங்கள்; இலங்கையினுடைய இன்று இருக்கிற அரசு, 50 ஆண்டுகளுக்கு முதல் யாராக இருந்தார்கள்? போராளிகளாக இருந்தார்களா அல்லது பயங்கரவாதிகளாக இருந்தார்களா?
இந்த நாட்டினுடைய போராளிகள் என்று அவர்களைச் சிங்கள மக்கள் ஏற்கிறார்கள். 50 ஆண்டுகளுக்கு முதல் – அவர்கள் 70-களிலும் சரி, 89-களிலும் சரி – அவர்கள் நடத்திய வன்முறைகளையோ, யுத்தங்களையோ பயங்கரவாதமாக யாரும் சொல்லத் தயாராக இல்லை. அவர்கள் போராளிகள். இன்று அந்த 50 ஆண்டுகள் கடந்து, அந்தப் போராளிகளிடம் சிங்கள மக்கள் இந்த நாட்டை ஒப்படைத்திருக்கிறார்கள்.
யாருக்காகச் சிங்கள மக்களுடைய விடுதலைக்காக யார் போராடினார்களோ, அவர்களே இன்று ஆட்சியில் இருக்கிறார்கள். ஆகவே, எந்தத் தமிழீழ மக்களுக்காக நீங்கள் போராடினீர்களோ, அதேபோலத் தமிழீழ மக்கள் உங்களிடமே இந்த ஆட்சியைத் தரக் கூடாது? அந்த வழியிலே உங்களுடைய பயணம் ஏன் அப்படி இருக்கக் கூடாது?
வணக்கத்திற்குரிய பிதா அவர்கள் சொன்னார்: “நீங்கள் அரசியல் கட்சியாக மாறக் கூடாது” என்று. ஆனால், ஒரு அரசியல் இயக்கத்தைக் கட்டி வளர்ப்பதற்கான அழுத்தக் குழு என்பது மிக மிக முக்கியமானது. ஏன் அவர்களைப் போராளிகளைச் சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்றால், அவர்களிடம் பொறுப்புகளை அவர்கள் ஒப்படைக்கிறார்கள் என்றால், தமிழ் மக்கள் ஏன் சிந்திக்கக் கூடாது? போராளிகளிடம் பொறுப்புகளை ஒப்படைக்க ஏன் தமிழ் மக்கள் சிந்திக்கக் கூடாது?
அந்தச் சிந்தனைக்கான களத்தை உருவாக்குவதுதான் காலத்தின் தேவை. அந்தக்காலத்தின் தேவையைச் சரியாகக் கொண்டு செல்ல வேண்டியது ஒவ்வொருவருக்கும் உரிய கடமை. அதனால் தான் நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்; போர் என்பதும் போராட்டத்தினுடைய வலி என்பதும் எங்களுக்குள் இருக்கிறது.
நாங்கள் ஒரு தேசத்தின் விடுதலைக்காகப் போராடியினம். எங்களுடைய கைகளிலே துப்பாக்கி இருந்தது, பெரிய பீரங்கிகள் இருந்தது, விமானங்கள் இருந்தது, கப்பல்கள் இருந்தது. நாங்கள் போராடினோம்; உலகத்தின் கண்களை நிமிர்ந்து பார்க்க வைத்தோம். ஆனால், மௌனிக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் நாங்கள் பேசப்படுகிறோம், ஒரு இனமாக இந்த உலகத்திலே அங்கீகரிக்கப்படுகிறோம்.
காலமும் சூழலும் இயற்கையும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. இயற்கை தான் விரும்பும் பொழுது, அந்த நேரத்தில் உள்ள ஒரு தலைவனை இயற்கை தெரிவு செய்கிறது. ஆகவே தலைவர்கள் பிறந்து வருவதில்லை; இருப்பவர்களில் ஒருவரை இயற்கை தானாகத் தெரிவு செய்கிறது.
அந்த இயற்கையினுடைய தெரிவு வரலாற்றில் மாற்றங்களைத் தரும். அந்த மாற்றங்களை நோக்கிய பயணத்திலே நாங்களும் எங்களுடைய கரங்களைப் பலமாக இறுகப்பற்றி உங்களோடு பயணிப்போம். உங்கள் வாழ்க்கையினுடைய எதிர்காலமும் இந்தப் போராளி நலன்புரிச் சங்கத்தினுடைய பணிகளும் மென்மேலும் வளர உங்களோடு நாங்கள் சேர்ந்திருப்போம் எனக் கூறி, இந்த நன்னாளிலே எங்களையும் நீங்கள் அழைத்துச் சில வார்த்தைகள் பேசக் கிடைத்த வாய்ப்புக்கு நன்றி கூறி, மட்டக்களப்பு மண்ணுக்கும் தலைசாய்த்து நிறைவு செய்கிறேன்.
00
மஹர சிறை மோதலால் 15 கோடி ரூபாய் இழப்பு
Aug 3, 2026 – 07:48 AM
Share
மஹர சிறை மோதலால் 15 கோடி ரூபாய் இழப்பு
Mobitel inner
மஹர சிறைச்சாலையில் நேற்று (01) முன்தினம் ஏற்பட்ட மோதலினால் சிறைச்சாலைக்கு நேர்ந்துள்ள சேதம் 15 கோடி ரூபாய்க்கும் அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோதலுக்கான காரணங்களைக் கண்டறிய தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அதில் இத்தகவல் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
சிறைச்சாலையின் பெருமளவிலான சொத்துக்களைக் கைதிகள் அழித்துள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெரும்பாலான கட்டடங்களின் ஓடுகள் உடைக்கப்பட்டு, கூரைகளுக்குக் பலத்த சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதுடன், சிறைச்சாலை புனர்வாழ்வுத் திட்டங்களின் கீழ் தையல் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்களையும் கைதிகள் அழித்துள்ளமை தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று நள்ளிரவு வரை கைதிகள் சிறைச்சாலை வளாகத்திற்குள்ளிருந்து வெளிப்புறத்தை நோக்கிக் கற்களினால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அக்கல்தாக்குதல்கள் காரணமாகச் சிறைச்சாலையைச் சுற்றியுள்ள சில வீடுகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில், ‘சாத்தான்’, ‘அசார்’, ‘பட்டா’ மற்றும் மற்றொரு கைதியும் இணைந்தே இந்த பதற்றமான சூழ்நிலையை வழிநடத்தியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
பதற்றநிலையின் போது வன்முறையில் ஈடுபட்ட கைதிகளை அடையாளம் கண்டு, அவர்களில் 104 பேரைப் பூசா உள்ளிட்ட மேலும் 7 சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யச் சிறைச்சாலைகள் திணைக்களம் நேற்று பிற்பகல் நடவடிக்கை எடுத்தது.
சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் பரிமாற்றத்தைக் கட்டுப்படுத்தக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால், இந்நாட்களில் நிலவும் போதைப்பொருள் தட்டுப்பாடு காரணமாகவே இந்தப் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நான்கு கைதிகள் கூரை மீதேறி, சிறைச்சாலை நிர்வாகத்திற்கு எதிராகத் தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்ததாகவும், அதன்போது சிறைச்சாலையின் உயர் அதிகாரி ஒருவர் வருகை தந்து இது தொடர்பில் கைதிகளிடம் கேட்டறிந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால், அங்கிருந்த கைதிகள் சிறைச்சாலை அதிகாரிகளை நோக்கிக் கற்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அந்நேரத்தில் அதிகாரிகள் அவ்விடத்திலிருந்து வெளியேறியதுடன், சிறைச்சாலை வைத்தியசாலையில் உள்ள மருந்துகள், சமையலறையிலுள்ள கூர்மையான ஆயுதங்கள் மற்றும் ஆயுதக் களஞ்சியத்திலுள்ள ஆயுதங்கள் உள்ளிட்ட உபகரணங்களைப் பாதுகாப்பாக அவ்விடங்களிலிருந்து அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதற்கிடையில், மேலும் சுமார் 1,500 கைதிகள் சிறைச்சாலையின் ஒரு பகுதியில் கட்டப்பட்டு வரும் மதிலை உடைத்துத் தப்பியோட முயற்சித்துள்ளனர். அந்த முயற்சியை முறியடிப்பதற்காகச் சிறைச்சாலை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
எவ்வாறாயினும், அந்நேரத்தில் மற்றொரு குழுவினர் சிறைச்சாலையின் கட்டடமொன்றுக்குத் தீ வைத்துள்ளனர்.
பின்னர் அவர்களிலுள்ள ஒரு குழுவினர், கைதிகளிடமிருந்து கைப்பற்றப்படும் போதைப்பொருட்கள் சேமித்து வைக்கப்படும் கட்டடத்தை உடைத்து, அங்கிருந்த போதைப்பொருட்களைப் பயன்படுத்தியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வாறான பின்னணியில், மேலும் சில கைதிகள் ஏனையோர் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக் கூடங்களுக்குச் சென்று, அங்குள்ள பூட்டுகளை உடைத்து அவர்களும் அச்சிறைக் கூடங்களிலிருந்து வெளியே வருவதற்குச் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.
அவர்களில் ஒரு பகுதியினர் சிறைக் கூடங்களிலிருந்து வெளியே வந்தபோதிலும், மற்றொரு குழுவினர் அதனை மறுத்துத் தாம் தங்கியிருந்த சிறைக் கூடங்களிலேயே தங்கியிருந்துள்ளனர்.
அந்தச் சந்தர்ப்பத்தில், பதற்றநிலையை வழிநடத்திய கைதிகள் வந்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.