உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர்கள் மற்றும் இதன் பின்னணியில் இருந்த பிரதான சூத்திரதாரி யார் என்பது குறித்த உண்மைகள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். பிரதான சூத்திரதாரி யார் என்பது இனங்காணப்படும் வரை மக்கள் மனதில் பலவிதமான சந்தேகங்களும் எண்ணங்களும் எழுவது இயல்பானதாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபிர் ஹசீம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும். இருப்பினும், இத்தாக்குதலுடன் தொடர்புடைய இன்னும் பலர் இருக்கக்கூடும் என்பதால், இதன் பின்னணியில் இருந்த பிரதான சூத்திரதாரி யார் என்பதைக் கண்டறிவதே தற்போதைய மிகப்பெரிய கேள்வியாகும். இந்த உண்மை கண்டறியப்படுவது முஸ்லிம் சமூகத்திற்கும் கத்தோலிக்க சமூகத்திற்கும் மிகவும் முக்கியமான ஒன்றாகும் என்பதால், இதற்குச் சரியான தீர்வு காணப்பட வேண்டும்.
மாவனல்லைப் பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களால் நாமும் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளோம். உயிர்த்த ஞாயிறு சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் மற்றும் சி.ஐ.டி அதிகாரிகளுடன் இணைந்து செயற்பட்டதன் காரணமாகவே, எனது பிரத்தியே செயலாளர் மீது அவரது வீட்டிற்குச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அந்தப் தாக்குதலால் இன்றளவும் அவரது உடலின் ஒரு பகுதி பக்கவாதத்தால் முடங்கிய நிலையில் உள்ளது.
அவருக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீடு முழுமையாக வழங்கப்படாததால், அவரைத் நானே பராமரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இச்சம்பவம் எவ்வாறு நடந்தது, யார் ஏன் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்பது குறித்து இதுவரை சரியான நீதி கிடைக்கவில்லை. எனவே, அவருக்கு வழங்கப்பட வேண்டிய எஞ்சிய இழப்பீட்டுத் தொகையை அரசாங்கம் வழங்க வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கவுள்ளேன்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இருந்த முக்கிய குற்றவாளி யார் என்பது உத்தியோகபூர்வமாகக் கண்டு பிடிக்கப்படும் வரை மக்கள் மனதில் பலவிதமான சந்தேகங்களும் எண்ணங்களும் எழுவது இயல்பானதாகும். ஏதோ ஒரு நாளில் அந்த உண்மை வெளிவரும் என எதிர்பார்க்கின்றோம். அதேவேளைத் கட்சி என்ற ரீதியில் எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றோம் என்றார்.