வெறுப்புணர்வால் தூண்டப்பட்ட மிரட்டல் மற்றும் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பில் டொராண்டோவைச் சேர்ந்த ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாண்ட் வீதி (Bond Street) மற்றும் ஷூட்டர் வீதி (Shuter Street) பகுதியில் ஜூலை 19 அன்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தங்களது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
எவ்வித தூண்டுதலுமின்றி, குற்றம் சாட்டப்பட்ட நபர் பாதிக்கப்பட்டவரை அணுகி, தொடர்ச்சியாக இஸ்லாமிய எதிர்ப்பு (anti-Muslim) கருத்துக்களைக் கூறியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்டவர் அங்கிருந்து நடந்து செல்ல முயன்றபோதிலும், குற்றம் சாட்டப்பட்ட நபர் அவரைத் தொடர்ந்து சென்று மிரட்டல்களை விடுத்துள்ளார். இதனால் தனது பாதுகாப்பிற்கு பயந்த பாதிக்கப்பட்டவர், அந்த வழியாக வந்த பொலிஸ் அதிகாரியை அழைத்து உதவியைக் கோரியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸ் அதிகாரிகள் குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்தனர். ஆனால், அவர் தனது அடையாளத்தை வெளிப்படுத்த மறுத்ததுடன், பொலிஸ் அதிகாரிகளையும் வன்முறையாக மிரட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, 45 வயதான ரெஜினால்ட் கஃப் (Reginald Cuff) என்பவர் கைது செய்யப்பட்டு, அவர் மீது பின்வரும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன:
-
குற்றவியல் துன்புறுத்தல் (Criminal harassment)
-
அச்சுறுத்தல்/மிரட்டல் விடுத்தல் (இரண்டு வழக்குகள்)
-
பொலிஸ் அதிகாரியின் கடமைக்கு இடையூறு விளைவித்தல் (Obstructing a peace officer)
இந்தச் சம்பவம் குறித்து தகவல் தெரிந்த எவரும் பொலிஸாரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.