திங்கட்கிழமை இரவோடு இரவாக வோட்டர்லூவில் (Waterloo) இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் கடை மேலாளர் ஒருவர் காயமடைந்தமை குறித்து வோட்டர்லூ பிராந்திய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இரவு 11:40 மணியளவில் ‘கிங் வீதி வடக்கு’ (King Street North) மற்றும் ‘யுனிவர்சிட்டி அவென்யூ கிழக்கு’ (University Avenue East) பகுதியில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகக் கிடைத்த தகவலையடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஐந்து சந்தேக நபர்கள் பொருட்கள மறைத்து எடுத்துக்கொண்டு, பணத்தைச் செலுத்தாமல் வணிக நிறுவனத்திலிருந்து வெளியேற முயன்றதாக புலனாய்வாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கடை ஊழியர்கள் அந்த நபர்களை வழிமறித்தபோது, அவர்களுக்குள் கைக்கலப்பு ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மோதலின் போது கடையின் மேலாளர் காயமடைந்தார். எனினும், காயங்களின் தீவிரத்தன்மை குறித்த மேலதிக விவரங்களை பொலிஸார் வெளியிடவில்லை.
சந்தேக நபர்கள் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட ஐந்து கருப்பின இளைஞர்கள் என விவரிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களில் ஒருவர் நீல நிற ட்ராக் பேன்ட் (Track pants) மற்றும் வெள்ளை நிறச் சட்டையும், மற்றொருவர் கருப்பு நிற ஹூட் அணிந்த சட்டையும் (Hooded sweatshirt) அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.