2019 ஆம் ஆண்டு பொலிஸ் அதிகாரிகளுடன் தொடர்புடைய சம்பவம் தொடர்பாக பதுளை மேல் நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பண்டாரவளை கடவைக்கு அருகில் இடம்பெற்ற மோதலின் போது பொலிஸ் அதிகாரிகளை சட்டவிரோதமாகத் தடுத்து நிறுத்தியமை, உடற்காயம் ஏற்படும் வகையில் தாக்குதல் நடத்தியமை மற்றும் குற்றவியல் அச்சுறுத்தல் விடுத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் விஜேசிறி குற்றவாளி என மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
2019 ஆம் ஆண்டில் எம்பி பயணித்த வாகனத்தை பொலிஸ் ஜீப் வண்டி ஒன்று முந்திச் சென்றதையடுத்து ஏற்பட்ட தர்க்கத்தில் இருந்தே இந்த வழக்கு உருவானது. இந்த மோதல் தீவிரமடைந்து பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக அரசுத் தரப்பு வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.
விசாரணையைத் தொடர்ந்து, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து, சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பதுளை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.