சென்னை:
அதிமுகவைச் சேர்ந்த சத்தியபாமா, ஜெயக்குமார், மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இது குறித்து தங்கள் தரப்பு விளக்கத்தை நேரில் வந்து அளிக்குமாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையின் செயலர் சாந்தி கடிதம் எழுதியுள்ளார். தவெகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏக்களான சத்தியபாமா, ஜெயக்குமார், மரகதம் குமரவேல், முனைவர் இசக்கி சுப்பையா ஆகிய நான்கு பேரிடம் சபாநாயகர் மீண்டும் விசாரணையை நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த கடிதத்தில், ‘தாங்கள் மே 13-ஆம் நாளன்று அளித்த தகுதிநீக்க மனு தொடர்பாக, நான்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அளித்த பதில்கள் மீது கூடுதல் விளக்கம் தேவைப்பட்டதால், 1986-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களின் விதிகளின் விதி 7(7)-ன் கீழ், பேரவைத் தலைவர் ஜூலை 03 அன்று முனைவர் இசக்கி சுப்பையாவையும், ஜூலை 09 அன்று சத்தியபாமா, ஜெயக்குமார் மற்றும் மரகதம் குமரவேல் ஆகியோரையும் நேரில் அழைத்து விளக்கம் கோரினார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்போது அவர்கள் தெரிவித்த கருத்துகள் மற்றும் பார்வையில் காணும் இச்செயலக கடிதங்கள் மற்றும் தங்களின் கடிதங்களைத் தொடர்ந்து, பேரவைத் தலைவர் இருதரப்பினரையும் அழைத்து மேலும் சில விளக்கங்களை கோர விரும்புவதால், கீழ்க்காணும் அட்டவணையின்படி பேரவைத் தலைவர் அறையில் மேற்காணும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களை விளக்கமளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். எனவே, அச்சமயத்தில் அவர்கள் விளக்கம் அளிக்கையில், தாங்களும் நேரில் வந்து தங்கள் தரப்பு விளக்கங்களை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப் பணிக்கப்பட்டுள்ளேன் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் எம்எல்ஏக்கள் ஒவ்வொருவரிடமும் சுமார் 30 நிமிடங்கள் விசாரணை நடைபெறுகிறது. வரும் ஆகஸ்ட் 05-ஆம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரின் நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
#ADMK #EdappadiPalanisamy #TVK #AssemblySecretary #TamilNadu #TamilNews #BMNews #PoliticalUpdate #BreakingNewsTN #TamilNaduPolitics #SpeakerPrabhakar #PoliticalNews #TamilNewsLive