லிந்துலை – மெராயா பகுதியிலிருந்து ஹென்போல்ட் தோட்டத்திற்குச் செல்லும் பாதையில் அமைந்துள்ள இரும்புப் பாலம் உடைந்து விழுந்ததால், அப்பகுதி மக்களின் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட டித்வா புயலின் தாக்கத்தால் இந்த நிலை ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் இதுவரை போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து தேவைகளுக்காக இதுவரை தற்காலிகப் பாலம் கூட அமைக்கப்படாததால், அங்குள்ள மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதன் காரணமாக, லிந்துலை – ஹென்போல்ட் தோட்டத்தின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள மிளகுசேனை, ஊட்டுவெளி, சென்ட்ரல் கிளாஸ் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள், தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக ஆபத்தான முறையில் ஆற்றைக் கடந்து செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறியளவில் மழை பெய்தாலே ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து, அந்த வழியாக மக்கள் செல்ல முடியாத நிலை உருவாகிறது. இதனால், அவர்கள் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் சுற்றுவழிப் பாதையை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், கிராம மக்கள் முழுமையாக வெளியேற முடியாத அபாய நிலை உருவாகும் என்ற அச்சமும் அப்பகுதி மக்களிடையே நிலவி வருகிறது.