ஒசூர்:
மேகதாது அணையை கட்ட அனுமதி மறுக்கும் தமிழக அரசை கண்டித்து தமிழ்நாடு – கர்நாடகா எல்லையில் கன்னட அமைப்பினர் போராட்டம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் தமிழக பேருந்து ஒசூரிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள மேகதாது பகுதியில் அணை கட்ட கர்நாடகா அரசு முயற்சித்து வருகிறது. ஆனால், காவிரி ஆற்றில் எந்தவொரு கட்டுமானமும் கட்டப்படக்கூடாது என உச்ச நீதிமன்ற தீர்ப்பு உள்ளது. எனினும், இதை மீறி மேகதாது அணையை கட்டியே தீருவது என்ற முடிவுடன் கர்நாடகா அரசு செயல்பட்டு வருகிறது. மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டும்பட்சத்தில், அது லட்சக்கணக்கான தமிழக விவசாயிகளை பாதிக்கும் என்பதால் இதனை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது. இதனால் கன்னட அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், பெங்களூரு – ஒசூர் எல்லையில் “கன்னட ஜாக்கிருதி வேதிகே” என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அதிகாலை 4 மணி முதலே தமிழகத்தில் இருந்து பெங்களூரு நோக்கி செல்லும் அனைத்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளை ஒசூரிலேயே போலீசார் நிறுத்தி வைத்துள்ளனர். அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில், கிருஷ்ணகிரி காவல்துறை உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தர்மபுரி மண்டல தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகமும் ஒசூரை தாண்டி பெங்களூருக்கு பேருந்துகள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. இதனால் மறு உத்தரவு வரும் வரை பெங்களூருவுக்கு பேருந்துகள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மறியல் போராட்டத்தால் தமிழகப் பேருந்துகள் ஒசூரிலேயே முடங்கிக் கிடக்கின்றன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும், பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால் ஒசூரில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. வன்முறை சம்பவங்களை தடுப்பதற்காக, ஜூஜூவாடி மற்றும் அத்திப்பள்ளி பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கர்நாடகப் பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் வழக்கம் போல இயக்கப்படுகின்றன.
#Mekedatu #Hosur #TamilNadu #Karnataka #BorderProtest #TamilNews #BMNews #PoliticalUpdate #BreakingNewsTN #TamilNaduPolitics #TransportUpdate #TamilNewsLive