வெள்ளையுடை அணிந்த அடையாளம் தெரியாத இருவர், தெகிவளை – கல்கிஸை ‘நிசல செவன’ பொது மயானத்திற்குள் புகுந்து, அங்கிருந்த காவலாளி மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெகிவளைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்துப் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள விபரங்கள் வருமாறு:
பாதிக்கப்பட்ட நபர் மயானத்தில் தனது கடமைகளில் ஈடுபட்டிருந்தபோது, அங்குள்ள இறுதிக்கிரியைகள் நடைபெறும் இடத்திற்குச் சென்றுள்ளார்.
இதன்போது, ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், மயானத்தின் வாயிலில் வாகனத்தை நிறுத்திவிட்டு, தலைக்கவசம் அணிந்தபடி சுமார் 20 மீட்டர் தூரம் நடந்து வந்துள்ளனர்.
அந்த நபர் இருந்த இடத்திற்கு அருகில் சென்றவர்கள், அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு, மீண்டும் நடந்து சென்று மோட்டார் சைக்கிளில் ஏறித் தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டபோது, அந்த இடத்தில் மயானத்தின் பிற ஊழியர்கள் இருவரும் இருந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட நபரின் இடது கை மற்றும் நெஞ்சுப் பகுதியில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்துள்ளதாகவும், அவர் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலாளிகள் 9மி.மீ (9mm) ரகத் துப்பாக்கியைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.