வட்டர்லூ (Waterloo) பகுதியில் திருடப்பட்ட வாகனம் ஒன்று மீட்கப்பட்டதை அடுத்து, இரு பதின்ம வயதுச் (Teenage) சிறுமிகள் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர்.
கடந்த ஜூலை 11 ஆம் திகதி காலை 11 மணியளவில் ஆல்பர்ட் வீதியில் (Albert Street) வாகனம் ஒன்று திருடப்பட்டதாகக் கிடைத்த புகாரைத் தொடர்ந்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர். புலனாய்வாளர்கள் சிறிது நேரத்திலேயே அந்த வாகனத்தைக் கண்டுபிடித்தனர், ஆனால் அதிகாரிகள் வாகனத்தை நெருங்கிய போது, அதன் ஓட்டுநர் வாகனத்தைப் பின்னோக்கிச் செலுத்திப் பொலிஸ் ரோந்து வாகனத்தின் (Cruiser) மீது மோதியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருப்பதுடன், வாகனத்தில் இருந்த இருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிராண்ட்போர்டைச் (Brantford) சேர்ந்த 16 வயதுச் சிறுமி மீது பின்வரும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன:
-
மோட்டார் வாகனம் திருடியமை
-
5,000 டாலருக்கும் அதிக மதிப்புள்ள குற்றச் செயலின் மூலம் பெறப்பட்ட சொத்துக்களை வைத்திருந்தமை
-
அமைதிப் படை அதிகாரிக்கு (பொலிஸாருக்கு) இடையூறு விளைவித்தமை
-
19 வயதிற்கு உட்பட்ட நிலையில் கஞ்சா வைத்திருந்தமை
-
எளிதில் கிடைக்கக்கூடிய வகையில் கஞ்சாவுடன் வாகனத்தை ஓட்டியமை
கிச்சனரைச் (Kitchener) சேர்ந்த 17 வயதுச் சிறுமி மீது பின்வரும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன:
-
மோட்டார் வாகனம் திருடியமை
-
5,000 டாலருக்கும் அதிக மதிப்புள்ள குற்றச் செயலின் மூலம் பெறப்பட்ட சொத்துக்களை வைத்திருந்தமை
இந்தக் குற்றச்சாட்டுகளும் குற்றச்சாட்டுகளின் பின்னணியிலுள்ள வாதங்களும் இன்னும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.