நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து மாற்று இடங்களுக்கு மாற்றப்பட்ட கைதிகள் சித்திரவதைகளுக்கும் இதர கொடுமைகளுக்கும் உள்ளாக்கப்பட்டதாகத் தங்களுக்குப் புகார்கள் வந்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
மேலும், கைதிகள் இடமாற்றம் செய்யப்பட்டு ஒரு வாரத்திற்கும் மேலாகியுள்ள நிலையிலும், பல கைதிகளின் குடும்பத்தினருக்கு தங்களது உறவினர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறித்த தகவல்களை சிறைத்துறை அதிகாரிகள் இன்னும் வழங்கவில்லை. இது அவர்கள் பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய குற்றச்சாட்டுகள் பெரும் கவலையளிக்கின்றன. சர்வதேச சட்டத்தின்படி, அரச காவலில் உள்ள நபர்கள் பற்றிய தகவல்களைத் தொடர்ந்து மறைப்பது பலவந்தமாகக் காணாமல் ஆக்குதலுக்குச் சமமாக அமையலாம்.
அதிகாரிகள் உடனடியாக கைதிகளின் குடும்பங்களுக்குத் தேவையான தகவல்களை வழங்க வேண்டும், வழக்கறிஞர்களை அணுகுவதற்கான அனுமதியை உறுதி செய்ய வேண்டும், மற்றும் காவலில் உள்ள ஒவ்வொரு நபரும் சித்திரவதை மற்றும் கொடுமைகளில் இருந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
இலங்கை அதிகாரிகள் நீர்கொழும்பு சிறைச்சாலையில் என்ன நடந்தது என்பது குறித்து மட்டுமன்றி, பதிவாகியுள்ள காவலில் ஏற்பட்ட மரணங்கள் மற்றும் இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகள் சித்திரவதை மற்றும் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும் உடனடியாகவும் பாரபட்சமின்றியும் விசாரணைகளை நடத்த வேண்டும்.
மாற்றப்பட்ட ஒவ்வொரு கைதியையும் சித்திரவதைகள் மற்றும் பழிவாங்கல்களில் இருந்து அதிகாரிகள் பாதுகாக்க வேண்டும், காவலில் ஏற்பட்ட மரணங்கள் குறித்து விசாரிக்க வேண்டும், மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அனைத்து தடுப்புக்காவல் மையங்களையும் தடையின்றி பார்வையிடுவதற்கான அனுமதியை வழங்க வேண்டும், அத்துடன் குடும்பத்தினரும் வழக்கறிஞர்களும் காவலில் உள்ளவர்களைத் தொடர்புகொள்வதை உறுதி செய்ய வேண்டும்.