நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் நடந்த கொடூர வன்முறைக்கு கட்டுவெல்லகம சுரேஷ் என்ற கைதியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டமையே காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) சமர்ப்பித்த தகவல்களின்படி, ஜூலை 5ஆம் திகதி நீர்கொழும்பு சிறைச்சாலையின் A1 வார்டில் இருந்த கட்டுவெல்லகம சுரேஷ் என்ற கைதி, உடற்பயிற்சிக்காக வழங்கப்படும் 30 நிமிடங்களை விட மேலதிக நேரம் கோரியுள்ளார்.
இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவர் சிறைச்சாலை அதிகாரியை திட்டி அச்சுறுத்தியுள்ளார். மறுநாள் காலை, அவர் A2 வார்டு கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுவே வன்முறை பரவக் காரணமாக அமைந்ததாகவும், நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தகவல்களை வழங்கியுள்ளது.
மேலும், இதன் பின்னணியில், கைதிகள் சிறைச்சாலையின் மருந்தகம் மற்றும் நிர்வாகக் கட்டிடத்தை சேதப்படுத்தியுள்ளனர். சிறைச்சாலை அதிகாரிகள் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாததால் பொலிஸாரின் உதவியை நாடியுள்ளனர்.
கொழும்பில் இருந்து சிறைச்சாலை அவசரக்கால அதிரடிப் படையினர் வரவழைக்கப்பட்ட நிலையில், கைதிகள் கூரைகளின் மீது ஏறி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
மறுநாள் காலை உணவை வழங்கச் சென்ற அதிகாரிகள் மீது கைதிகள் கற்கள், மரத்தடிகள் மற்றும் இரும்புக்கம்பிகளால் தாக்கியுள்ளனர். நீர்கொழும்பு சிறைச்சாலை அதிகாரிகள் தப்பிச் சென்ற நிலையில், கொழும்பில் இருந்து சென்ற அதிகாரிகள் உள்ளே சிக்கிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.