இலங்கையில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்ற நிலையில் அவர்களுக்கான சிகிச்சை வளங்களில் நோயாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என புற்றுநோய் வைத்திய நிபுணரும், தேசிய புற்றுநோயியல் நிறுவன ஆலோசகரமான வைத்திய கலாநிதி நடராஜா ஜெயக்குமாரன் தெரிவித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் (10.06.2026) இடம்பெற்ற மறைந்த பேராசிரியர் நாகலிங்கம் சுந்தரலிங்கம் ஞாபகார்த்த நிகழ்வில் பேருரை ஆற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், புற்றுநோய் இலங்கையில் மட்டுமல்ல உலகத்தில் உள்ள பல நாடுகளில் தாக்கம் அதிகரித்துள்ள தன்மையை கொண்டுள்ளது. இந்தப் புற்றுநோய் உருவாவதற்கு பல்வேறு காரணங்கள் காணப்படுகின்ற நிலையில் பொதுவாக உணவுப் பழக்கங்கள் இந்த நோய்க்கு ஆரம்ப கர்த்தாவாக அமைகிறது.
உலகமயமாக்கலின் விளைவாக இரசாயன உரங்கள், கிருமி நாசினிகள், உணவு பொருட்களுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகின்றமையால் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துச் செல்கின்றது. உடற்பயிற்சி மற்றும் பாதுகாப்பான உணவு பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் இந்த நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
இலங்கையை பொறுத்தவரையில் புற்றுநோய்க்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் சுகாதார அமைச்சு நோயாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கான ஏற்பாடுகளையும் வழங்கியிருக்கிறது.
இலங்கையில் புற்றுநோயாளர் ஒருவர் தனது சிகிச்சையை விரும்பிய இடத்தில் பெறுவதற்கான உத்தரவாதங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் விரும்பிய இடங்களில் சிகிச்சைகளை பெற முடியும்.
ஆகவே புற்று நோய் வராமல் தடுப்பதற்கு சுகாதார வழிகாட்டல்கள் மற்றும் வாழ்க்கை முறைகளில் மாற்றங்களை கொண்டு வந்தால் தடுக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.