நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெறவுள்ள, மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மீதான சாசனத்தின் உறுப்பு நாடுகளின் 19ஆவது மாநாட்டுத் தொடரில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக, உள்நாட்டு மாற்றுத்திறனாளிகள் உரிமை ஆர்வலரான நில்சானி டி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான உலகளாவிய ரீதியிலான மிக முக்கிய உயர்மட்ட மாநாடாக இது கருதப்படுகிறது.
குறிப்பாக, இந்த ஆண்டு சாசனம் உருவாக்கப்பட்டு 20ஆவது ஆண்டு நிறைவை எட்டும் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில் இம்மாநாடு நடைபெறுகின்றது. இதில் உலக நாடுகளின் அரசாங்கங்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி அமைப்புகளின் தலைவர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இம்மாநாட்டுத் தொடரில் இலங்கையின் உத்தியோகபூர்வ ‘இளைஞர் பிரதிநிதியாக’ நில்சானி டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜூன் 9ஆம் திகதி நடைபெறவுள்ள மாநாட்டின் பிரம்மாண்ட தொடக்க அமர்வில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் மற்றும் ஏனைய சர்வதேசத் தலைவர்களுடன் இணைந்து உரையாற்றுவதற்கும் இவருக்கு விசேட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
டவுன் சிண்ட்ரோம் குறைபாட்டுடன் பிறந்த நில்சானி டி சில்வா, இலங்கையில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் முக்கிய செயற்பாட்டாளராகவும், ஊக்கமளிக்கும் பேச்சாளராகவும் விளங்குகிறார். அதுமட்டுமன்றி, அவர் ஒரு ஆசிரியராகவும், ஆடை வடிவமைப்பாளராகவும் சமூகத்தில் தடம் பதித்து, மாற்றுத்திறனாளிகள் குறித்த சமூகப் பாகுபாடுகளை உடைத்தெறிந்து வருகிறார்.
இலங்கை அரசாங்கம் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மீதான சர்வதேச சாசனத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு கையெழுத்திட்டதுடன், 2016ஆம் ஆண்டில் அதனை அங்கீகரித்தது இத்தகைய பின்னணியில், இந்த ஆண்டு நடைபெறும் 19ஆவது உலகளாவிய மாநாட்டுத் தொடருக்கு இலங்கை தலைமை தாங்கவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
மாற்றுத்திறனாளிகள் தொடர்பான கொள்கை முடிவுகளை எடுக்கும் உலகளாவிய உயர்மட்ட தளங்களில், அவர்களின் பிரதிநிதித்துவமும் உள்ளடக்கமும் எவ்வளவு முக்கியம் என்பதை நில்சானியின் இந்த ஐநா பயணம் சர்வதேச அரங்கில் மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளது.