யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (04.06.2026) காலை 9.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் பெளதீக மற்றும் நிதி முன்னேற்றத்தினை ஆராய்வதுடன், கணக்காய்வு ஐய வினாக்கள் தொடர்பிலும் கலந்துரையாடி அபிவிருத்தி வேலைத் திட்டங்களை குறிப்பிட்ட காலத்தில் முடிவுறுத்துவதற்காக ஆராய்வதற்கும் இக் கூட்டம் கூட்டப்பாட்டுள்ளது எனத் தெரிவித்தார். மேலும், நிதி ஒதுக்கீடுகளுக்கு அமைய வேலைத் திட்டங்களை குறிப்பிட்ட கால அவகாசத்தில் முடிவுறுத்திய பிரதேச செயலாளர்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டதுடன், அடுத்த நிதியாண்டின் நிதி முகாமைத்துவம் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
யாழ் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம், கிராமிய வீதி அபிவிருத்தி திட்டம், சமூக சக்தி திட்டம், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வீடமைப்பு, வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர்வளங்கல் அமைச்சின் வேலைத் திட்டங்கள், சுற்றாடல் அமைச்சின் வேலைத் திட்டங்கள் உள்ளிட்ட பல திட்டங்களின் முடிவுறுத்திய, முடிவுறத்தாத திட்டங்கள் தொடர்பாக அரசாங்க அதிபரால் ஆராயப்பட்டு, உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், பிரதம பொறியியலாளர், பிரதேச செயலாளர்கள், மாவட்ட, பிரதேச செயலகங்களின் பிரதி உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் கணக்காளர்கள், விடைய உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.