இந்தியாவின் நாகபட்டினத்திற்கும் யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்துச் சேவை, அசாதாரண காலநிலை காரணமாக ஏற்பட்ட சிறு தாமதங்களுக்குப் பிறகு மீண்டும் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ‘சிவகங்கை’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கப்பல், புதன்கிழமை (03.06.25) காலை நாகபட்டினத்தில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கி, மதிய அளவில் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.

பின்னர், அன்றைய தினமே மாலையில் காங்கேசன்துறையில் இருந்து மீண்டும் நாகபட்டினம் நோக்கித் தனது திரும்பும் பயணத்தை மேற்கொண்டது. இந்த மறுதொடக்கப் பயணத்தில் இந்தியாவில் இருந்து 93 பயணிகள் இலங்கையை வந்தடைந்ததுடன், இலங்கையிலிருந்து 79 பயணிகள் இந்தியா நோக்கிப் பயணித்தனர்.
இந்தச் சிறப்பு வாய்ந்த தருணத்தில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானகர் சந்தோஷ் ஜா அவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு நேரில் விஜயம் செய்தார். அவர் சிவகங்கை கப்பலின் அதிகாரிகள் மற்றும் மாலுமிகளுடன் கலந்துரையாடியதுடன், கப்பலின் பாதுகாப்பு மற்றும் வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும், இச்சேவையைப் பயன்படுத்திய பயணிகளிடம் அவர்களின் கருத்துக்களையும் தேவைகளையும் கேட்டறிந்த உயர்ஸ்தானகர், கப்பலையும் முழுமையாகப் பார்வையிட்டார்.
இந்தக் கலந்துரையாடலின் போது யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி, கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் கே.எம்.ஜெயசீலன், நிறுவன அதிகாரி பகீரதன், இந்தியாவின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் மற்றும் சுங்கத்துறை, கடற்படை அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர் இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார மற்றும் பொருளாதார உறவை மேம்படுத்தும் நோக்கில், இந்திய அரசினால் மாதாந்தம் பெரும் நிதி உதவி வழங்கப்பட்டு இச்சேவை தடையின்றித் தொடர வழிவகை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.