தற்போது தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழல் காரணமாக கருப்பு பட ட்ரெய்லர் தயாராக இருந்தாலும் அதை வெளியிடாமல் இருப்பதாக தெரிவித்துள்ளார் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி. ட்ரெய்லருக்காக சூர்யா ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
சூர்யா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கருப்பு படம் மே 14ம் தேதி திரைக்கு வருவது உறுதியாகிவிட்டது. ரிலீஸுக்கு இன்னும் ஒரு வாரம் கூட இல்லை. ஆனால் கருப்பு ட்ரெய்லரை எங்கய்யா காணோம் ஆர்.ஜே. பாலாஜி என்று ரசிகர்கள் கேட்க ஆரம்பித்தார்கள்.
இந்நிலையில் தான் சூர்யா ரசிகர்களுக்காக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஆர்.ஜே. பாலாஜி. அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, மே மாதம் 14ம் தேதி கருப்பு படத்தை ரிலீஸ் செய்ய எல்லாம் வேலையும் நடந்து வருகிறது. ஆனால் படத்திற்கு முன்பு ட்ரெய்லர் வரணும் தானே. ட்ரெய்லர் ரெடி தான். ஆனால் நம்மை சுற்றி அரசியல் நிகழ்வுகள் நிறைய நடக்கிறது. நாம் எல்லாம் ஆசையாக வாக்களித்து ஒரு விஷயம் நடந்துவிட்டது என்று சந்தோஷமாக இருந்தபோது பல எதிர்பாரா திருப்பங்கள் ஏற்பட்டுவிட்டது.நாம் எதிர்பார்க்கும் நல்ல விஷயம் விரைவில் நடக்கட்டும். நாம் ட்ரெய்லரை வெளியிட்டு அதை அரசியல் விஷயங்கள் ஓவர்டேக் பண்ணிவிடக் கூடாது. விரைவில் ஒரு தெளிவு கிடைக்கட்டும்.கருப்பன் கூட இருக்கான், கூட வருவான் என்றார்.
தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்றபோதிலும் அரசு அமைக்க முடியாமல் தவித்து வருகிறார் தவெக தலைவர் விஜய். அதனால் மக்களின் கவனம் எல்லாம் அடுத்த முதல்வர் ஆகப் போவது யார் என்பது மீது தான் உள்ளது. மேலும் சமூக வலைதளங்கள் பக்கம் சென்றாலே தவெக, திமுக, அதிமுக பற்றியே பேச்சாக இருக்கிறது. மேலும் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் குறித்தும் விவாதிக்கப்படுகிறது. அர்லேகர் யார் என்று கூகுள் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் சினிமா ரசிகர்கள்.