கோவை,
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தேர்தல் ஆதாயத்திற்காகக் குழந்தைகளைத் தவறாகப் பயன்படுத்துவதாகக் கோவை மாநகரக் காவல் ஆணையாளரிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி புகார் அளித்துள்ளார்.
கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த விசிக தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் பாலகிருஷ்ணன் அளித்துள்ள அந்தப் புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
“கடந்த 21-ம் தேதி சென்னையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் பரப்புரையின் போது பேசிய விஜய், ‘குழந்தைகள் சாக்லேட் அல்லது கிண்டர் ஜாய்க்கு அடம்பிடிப்பது போல, பெற்றோரிடம் அடம்பிடித்து எனக்கு (தவெக) வாக்களிக்கச் சொல்ல வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தார்.
அரசியல் முதிர்ச்சியற்ற இத்தகைய பேச்சால், எனது 5 வயது மகன் என்னிடம் தவெக-விற்கு ஓட்டுப் போடுமாறு அடம்பிடித்து அழுதான். நான் மறுத்தபோது அவன் உணவைத் தவிர்த்துவிட்டு அழுதுகொண்டே இருந்தான். இதனால் அவனிடம் பொய் சொல்ல வேண்டிய நிலைக்கு நான் தள்ளப்பட்டேன். பிஞ்சு குழந்தைகளின் மனதில் நஞ்சை விதைக்கும் விஜய்யின் இந்தச் செயல், பல குழந்தைகளிடையே உளவியல் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.
இது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா சட்டங்களின்படி தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே, விஜய் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, அவர் பேசிய அந்த வீடியோ காட்சிகளைச் சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும். இது தொடர்பாகத் தேர்தல் ஆணையத்திற்கும் புகார் அனுப்பியுள்ளேன். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தை நாடுவேன்.”
இவ்வாறு அந்தப் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், விஜய்க்கு எதிராகக் கோவையில் அளிக்கப்பட்டுள்ள இந்தப் புகார் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
#Vijay #TVK #VCK #CoimbatoreNews #TNElection2026 #ElectionCommission #ChildPsychology #PoliticalControversy #ThalapathyVijay #Balan #BreakingNews #TamilPolitics #VijaySpeech #KidsAndPolitics #PoliceComplaint #LegalAction #TamilNaduElection #May4 #VotePolitics #VijayFans