இலங்கை பொருளாதாரத்தில் வலுசேர்க்கும் பிரதான துறையான தேயிலைக் கைத்தொழில் தற்போது மிக மோசமான அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளதுடன், இத்துறை பாரிய வீழ்ச்சியை நோக்கி செல்வதாக தேசிய தேயிலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சமன் கீகனகே தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,
தற்போது உபயோகிக்கும் யூ-709 என்ற ஒரு மூட்டை உரத்தின் விலை சந்தையில் 15,000 ரூபா வரை அதிகரித்துள்ளது. ஆனால் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமைகளுக்கு முன்னர் 8,750 ரூபா முதல் 9,500 ரூபா வரை காணப்பட்டது. இந்த அதிரடி விலை உயர்வு தேயிலை பயிர்ச்செய்கையாளர்களுக்கு தாங்க முடியாத உற்பத்தி சுமையாக மாறியுள்ளது.
இலங்கையின் மொத்த தேயிலை உற்பத்தில் 75 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களே வழங்குகின்றனர்.
இந்நிலையில் குறைந்த வருமானத்தை பெற்றுக்கொண்டு அதிக விலைக்கு உரத்தை கொள்வனவு செய்து இத்தொழிலை முன்னெடுத்துச் செல்வது அவர்களுக்கு பாரிய சவாலாக மாறியுள்ளது.
இதேவேளை, ஒருபுறம் உற்பத்திச் செலவு அதிகரித்து வரும் நிலையில் மறுபுறும் பச்சைத் தேயிலைக் கொழுந்துக்கான விலை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
அதாவது பதுளை, நுவரெலியா மற்றும் கண்டி போன்ற மலைநாட்டு பகுதிகளில் ஒரு கிலோ தேயிலைக் கொழுந்து 150 ரூபாவிற்கும் குறைவான விலையிலேயே கொள்வனவு செய்யப்படுகிறது. தாழ்நாட்டுப் பகுதிகளில் ஒரு கிலோ கொழுந்து சுமார் 200 ரூபா வரையில் காணப்படுகிறது.
தற்போது அரசாங்கத்தின் புதிய சுற்றறிக்கையின்படி, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்தச் சம்பளம் 1,650 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனுடன் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நலனுக்கான நிதி உள்ளிட்ட கொடுப்பனவுகளையும் சேர்த்தால் ஒரு தொழிலாளிக்கு ஒரு நாளைக்கு சுமார் 2,000 ரூபா வரை செலவிட வேண்டியுள்ளது. இவ்வாறான சூழலில் அவர்களின் வாழ்வாதாரம் முற்றாக அழிந்து விடும் என்றார்.