இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனுடனான சந்திப்பைத் தமிழ் அரசியல் தரப்பினர் சரியாகப் பயன்படுத்தத் தவறிவிட்டதாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன், இச்சந்திப்பானது தமக்கிடையிலான ‘குடுமிச் சண்டைக்கு’த் தீர்வு கோருவதாகவே அமைந்திருந்தது என்றும் அவர் சாடியுள்ளார்.
இந்தியத் துணை ஜனாதிபதியின் இலங்கை வருகை மற்றும் தமிழ் அரசியல் பிரதிநிதிகளுடனான சந்திப்பு குறித்துக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“இந்தியாவின் துணை ஜனாதிபதி இலங்கை வந்திருந்தபோது, அவரைச் சந்திக்கக் கிடைத்த வாய்ப்பைத் தமிழ் அரசியல் தரப்பினர் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தவில்லை. தமிழ் மக்களின் அடிப்படைத் தேவைகளையோ அல்லது அரசியல் அபிலாஷைகளையோ வலியுறுத்துவதற்குப் பதிலாக, தமக்கிடையே இருக்கும் உட்கட்சிப் பூசல்களையும் முரண்பாடுகளையும் அவரிடம் முறையிட்டுத் தீர்வு கேட்டதாகவே இச்சந்திப்பு அமைந்திருந்தது. இது எனக்கும் எமது மக்களுக்கும் மிகுந்த வேதனையையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளது” என அவர் தெரிவித்தார்.
சுயலாப அரசியல்:தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “கடந்த காலங்களில் எனக்குக் கிடைத்த இத்தகைய வாய்ப்புகளை நான் மக்கள் நலனுக்காகவே பயன்படுத்தியுள்ளேன். குறிப்பாக 2010ஆம் ஆண்டு இந்தியா சென்றிருந்தபோது, 50 ஆயிரம் வீட்டுத்திட்டம், 500 உழவு இயந்திரங்கள் மற்றும் யாழ். கலாசார மத்திய நிலையம் உள்ளிட்ட முக்கியத் திட்டங்களைப் பெற்றுக்கொடுத்தோம். அத்துடன், 13ஆவது திருத்தச் சட்டமே தீர்வுக்கான ஆரம்பம் என்பதையும் அங்கு வலியுறுத்தியிருந்தேன்.
ஆனால், தற்போதுள்ள அரசியல் தரப்பினர் வழமைபோலத் தமது சுயலாப அரசியலில் ஈடுபட்டுக் கொண்டுதான் இச்சந்திப்பையும் பயன்படுத்தியிருக்கின்றார்கள். இந்தியாவைப் பொறுத்தவரையில் 13ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாகவே தீர்வைப் பெற்றுத்தர முயற்சிப்பார்கள். அதையாவது இவர்கள் அழுத்தம் கொடுத்துக் கேட்டிருக்கலாம். ஆனால், ஊடகங்கள் வாயிலாகப் பார்க்கும்போது, இவர்கள் தமது தனிப்பட்ட அரசியல் மோதல்களுக்கே முக்கியத்துவம் அளித்துள்ளனர் என்பது தெளிவாகிறது” என்றார்.
தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெறாமல், இவ்வாறான உயர்மட்டச் சந்திப்புகளை வீணடிக்கும் இவர்களது செயற்பாடு மக்களைச் சலிப்படைய வைத்துள்ளதாகவும் டக்ளஸ் தேவானந்தா இதன்போது மேலும் தெரிவித்தார்.