செ.தி. பெருமாள் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுசாக்கலை நீர்த்தேக்கத்தில் குதித்து, 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் இன்று மதியம் தன்னுயிரை மாய்த்து கொண்டுள்ளார். இச்சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்சீக் தோட்டத்தின் ராணி தோட்டப் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் நடந்த விதம்: சிறுமி காணாமல் போனது தெரியவந்ததையடுத்து, உறவினர்களும் அப்பகுதி மக்களும் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதன்போது, மவுசாக்கலை நீர்த்தேக்கத்தின் கரையில் சிறுமியின் பாதணிகள் கிடப்பதைக் கண்ட பொதுமக்கள், அவர் நீரில் குதித்திருக்கலாம் எனச் சந்தேகமடைந்து தேடுதலைத் தீவிரப்படுத்தினர். நீண்ட தேடுதலுக்குப் பிறகு, சிறுமியின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. பொலிஸ் விசாரணை: சம்பவம் இடத்திற்கு விரைந்த மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ். எஸ். புஷ்பகுமார, முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, ஹட்டன் பொலிஸ் பிரிவின் தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டன.
சடலம் தற்போது டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு சட்ட வைத்திய அதிகாரியின் முன்னிலையில் உடற்கூற்றுப் பரிசோதனை நடத்தப்படவுள்ளது. “பிரேதப் பரிசோதனை முடிந்த பின்னரே சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்,” என பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.