அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஒரு முக்கிய மத்தியஸ்தராக உருவெடுத்துள்ள பாகிஸ்தானின் பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் (Asim Munir), உயர்மட்டக் குழுவுடன் ஈரான் தலைநகர் டெஹ்ரானை சென்றடைந்துள்ளதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.
வாஷிங்டனிடமிருந்து ஒரு முக்கியமான செய்தியுடன் சென்றுள்ள முனீரின் தலைமையிலான குழு, ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தும்.
இந்தப் சந்திப்பின் போது, “இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தைகள் தொடர்பான விவகாரங்கள்” குறித்து விவாதிக்கப்படும் என்று ஈரானின் அதிகாரப்பூர்வ ஊடகமான IRIB தெரிவித்துள்ளது.
இவ்வளவு உயர்மட்ட அதிகாரி ஒருவர் பகிரங்கமாக இராஜதந்திர விஜயம் மேற்கொள்வது, இரு நாடுகளுக்கும் இடையே இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கான ஒரு நேர்மறையான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த வாரம் பாகிஸ்தானில் நடைபெற்ற உயர்மட்ட சந்திப்புகள் எவ்வித உடன்பாடும் இன்றி முடிவடைந்த நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் “அடுத்த இரண்டு நாட்களில் ஏதோ ஒன்று நடக்கப்போகிறது” என்று சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
ஈரான் தனது செய்திகளை அமெரிக்காவிற்குப் பாகிஸ்தான் ஊடாகத் தொடர்ந்து பரிமாறி வருவதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இன்று உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த வாரம் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியாகவே இந்தத் தற்போதைய நகர்வு பார்க்கப்படுகிறது.