சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நீடிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ், ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளை நிறைவு செய்வதற்கான பொருளாதாரக் கொள்கைகள் குறித்து சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் ஊழியர் மட்ட உடன்பாடு (Staff-level agreement) எட்டப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபையின் ஒப்புதலைத் தொடர்ந்து, இலங்கைக்கு சுமார் 700 மில்லியன் அமெரிக்கடொலர் நிதியுதவி கிடைக்கப் பெறும்.
இலங்கை அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தற்போதைய பொருளாதாரச் சீர்திருத்தங்கள் நாட்டின் மீட்சிக்கு உறுதுணையாக இருப்பதாக IMF குறிப்பிட்டுள்ளது. வெளிநாட்டு கையிருப்பு அதிகரித்துள்ளதோடு, உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி மற்றும் வருவாய் திரட்டல் ஆகியவை எதிர்பார்த்ததை விட சிறப்பாக உள்ளதாகவும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
இருப்பினும், மத்திய கிழக்கு மோதல்களின் தாக்கம் மற்றும் டிட்வா (Ditwah) புயலுக்குப் பின்னரான மீட்புப் பணிகள் போன்ற வெளிப்புற அபாயங்களால் நாடு இன்னும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றது.
பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கும், நீடித்த மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்வதற்கும் சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்வது மிகவும் அவசியமானது என்று IMF வலியுறுத்தியுள்ளது. உலகளாவிய நிச்சயமற்ற நிலைகளுக்கு மத்தியில், வெளிப்புற அதிர்ச்சிகளைச் சிறப்பாக எதிர்கொள்ள பொருளாதார நெகிழ்ச்சித்தன்மையை வலுப்படுத்துவது அவசியம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.