இலங்கையில் நிலவும் எரிசக்தி நெருக்கடி மற்றும் மசகு எண்ணெய் விலை உயர்வுக்குத் தீர்வாக, ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளைப் பெறுவதற்கான அரசியல் மட்டத்திலான உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் ‘டாஸ்’ (TASS) செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணலில், இந்தத் திட்டம் குறித்த அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஏப்ரல் மாதம் நடுப்பகுதியிலிருந்து ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் விநியோகம் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியல் மட்டத்திலான முடிவுகள் எடுக்கப்பட்ட போதிலும், இதற்கான தொழில்நுட்ப ரீதியான நடைமுறைகள் மற்றும் நிதி செலுத்தும் முறைகள் (Financial details) தற்போது இறுதி செய்யப்பட்வுள்ளன.
உலகளாவிய ரீதியில் மசகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளதாலும், உள்நாட்டில் சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாலும், குறைந்த விலையில் ரஷ்யாவிடமிருந்து எரிபொருளைப் பெறுவது இலங்கைக்குப் பெரும் நிம்மதியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச அரசியல் சூழலில் ரஷ்யா மீது பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை இத்தகைய நேரடி உடன்பாட்டை மேற்கொள்வது நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான ஒரு முக்கியமான நகர்வாகப் பார்க்கப்படுகிறது.